Home கலை உலகம் திரைவிமர்சனம்: ‘எனக்குள் ஒருவன்’ – பார்த்து ரசிக்க வேண்டிய கனவு!

திரைவிமர்சனம்: ‘எனக்குள் ஒருவன்’ – பார்த்து ரசிக்க வேண்டிய கனவு!

758
0
SHARE
Ad

Enakkul-Oruvan movie stillsமார்ச் 7 –  நிஜத்தில் கிடைக்காக ஒரு வாழ்க்கையை கனவில் வாழ்ந்து பார்க்க, கதாநாயகன் சித்தார்த்துக்கு, ‘லூசியா’ என்ற மாத்திரை உதவுகிறது.

ஆனால், கனவில் வாழும் அந்த வாழ்க்கையிலும் காதல் தோல்வி, நண்பரின் மரணம், ரவுடி கும்பலின் மிரட்டல்கள் என அடுக்கடுக்காக பல துன்பங்கள் அவரை துரத்துகின்றன.

தான் நினைத்த ஒரு வாழ்க்கையை நிஜத்திலும் வாழ முடியாமல், கனவிலும் வாழ முடியாமல் சிக்கித் தவிக்கும் விக்கி கதாப்பாத்திரம் (சித்தார்த்) இறுதியில் என்ன முடிவு எடுக்கிறார் என்பதை சற்றே குழப்பமான திரைக்கதையுடன், அதே நேரத்தில் ரசிக்கும் படியாகவும் இயக்கியுள்ளார் பிராசாத் ராமர்.

#TamilSchoolmychoice

எவ்வளவு நாளைக்கு தான் அரைச்ச மாவையே அரைக்க போறீங்க? என்று தமிழ்ப் படங்களைப் பார்த்து கேள்வி கேட்போருக்கு ‘எனக்குள் ஒருவன்’ மிகவும் உற்சாகத்தை அளிக்கும். கிறிஸ்டோபர் நோலனின் ‘தி இன்ஷெப்ஷன்’ என்ற ஆங்கிலப் படத்தில் வருவது போன்ற கதையம்சம் கொண்ட சைக்காலஜிக்கல் திரில்லர்  படம். கன்னடத்தில் ‘லூசியா’ என்ற பெயரில் வெளிவந்த படத்தை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஏற்றார் போல் சில மாற்றங்களுடன் உருவாக்கியிருக்கிறார்கள்.

100 டான்சர்ஸூடன் கதாநாயகன் அறிமுகம், கதாநாயகியுடன் பனிப்பிரதேசத்தில் டூயட், வில்லன்கள் துரத்த டாட்டா சுமோவில் பறக்கும் ஹீரோ … இப்படிப்பட்ட மசாலா படங்கள் தான் பார்ப்பேன் என்பவர்களுக்கு ‘எனக்குள் ஒருவன்’ ரொம்ப கஷ்டம்.

 நடிப்பு:

1410196636_44164-Enakkul-Oruvan-Movie-Stills-1

சித்தார்த் அற்புதமான நடிப்பு… இரண்டு மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் அவ்வளவு வித்தியாசம் காட்டி நடித்திருக்கிறார்.

தியேட்டர் தொழிலாளியாக எத்துப் பல்லும், கரிய நிறமும், முடிவெட்டும் அப்படியே ஒரு ஏழ்மை தொழிலாளியின் தோற்றத்தை பிரதிபலிக்கின்றது.

கால்களுக்கு இடையில் லுங்கியை சொருகிவிட்டுக் கொண்டு, தூக்கம் வராமல் நடுரோட்டு டீக்கடையில் டீ குடிக்கும் காட்சி அடடா…

அதேநேரத்தில் ஜெல் போட்டு கோதிவிடப்பட்ட தலைமுடியும், மொழு மொழு பளீச் முகமும், உயர் ரக கண்ணாடியும் அணிந்து ஒரு நடிகரையும் கண் முன் நிறுத்தியிருக்கிறார்.

குறிப்பாக, அந்த ‘பட்டிணம்’ பத்திரிகையாளர் சந்திப்பு காட்சியில் “உங்களுக்கு என்னங்க பிரச்சனை .. ஆமா அவள லவ் பண்றேன் இப்ப என்ன?” என்று நிருபரிடம் ஆத்திரப்படுவது, வேண்டா வெறுப்பாக ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்ளும் காட்சி என உச்சத்தில் இருக்கும் நடிகர்களின் பாணி, திமிர், அலட்சியம் என அப்படியே இயல்பாக வாழ்ந்திருக்கிறார்.

கதாநாயகி தீபா சன்னிதி புதுமுகம் என்றாலும், நடிப்பு மிகவும் இயல்பாக இருக்கின்றது. பிட்ஸா கடை பணியாளர், நடிகை என இவருக்கும், சித்தார்த்துக்கு இணையாக இரண்டு கதாப்பாத்திரங்கள். இரண்டிலும் தோற்றத்திலும், நடிப்பிலும் மாறுபாடு தெரிகின்றது.

“லூசியா – தி ஸ்லீபிங் பில்” என்று ஒரு மாதிரி நெளிந்து கொண்டு ஜான் விஜய் பேசும் வசனத்திற்கு திரையரங்கில் அவ்வளவு வரவேற்பு. சில காட்சிகளில் வந்தாலும் மிரட்டுகிறார்.நரேனின் உணர்வுப் பூர்வமான நடிப்பு பல காட்சிகளில் கண்கலங்க வைக்கின்றது.

திரைக்கதை 

1410196126_44194-Enakkul_oruvan_(2)

கொஞ்சம் கவனமாக பார்க்க வேண்டிய படம். அவ்வளவு சிக்கலான திரைக்கதை. ‘படம் பாத்துக் கொண்டிருக்கிறேன்’ என்று பேஸ்புக்கில் ஒரு ஸ்டேடஸ் போட்டுவிட்டு மீண்டும் திரையை பாத்தீர்கள் என்றால் கூட ‘என்ன ஆச்சு’ என்று பக்கத்தில் இருப்பவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டிய நிலை வரும். அந்த அளவிற்கு மூன்று வெவ்வேறு கோணங்களில் பிரிந்து இறுதியில் ஒன்றாக இணையும் திரைக்கதை அமைப்பு.

ஆனால், தமிழ் பட ரசிகர்களின் மனநிலையை புரிந்து கொண்ட இயக்குநர் அறிவியல் சம்பந்தப்பட்ட விசயங்களை கதைக்குள் திணிக்காமல், அதை ஒரு தகவலாக மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார். ‘லூசியா’ என்றால் என்ன என்பதை கூட நமக்கு விளக்கவில்லை.

என்றாலும், நிறக் குருடானவர் வண்ணத்தில் கனவு காண்பது, திரையரங்கு பணியாளர் சித்தார்த்தை லோக்கல் ரவுடியாக வந்து மிரட்டும் யோக் ஜேபி, கிளைமாக்சில் மட்டும் எப்படி மாஃபியா ஆளாக வந்து மிரட்டுகிறார்? லூசியா மாத்திரையால் சித்தார்த்துக்கு மனதளவில் என்ன விதமான பாதிப்பு நேர்ந்தது? போன்ற பல கேள்விகளுக்கு பதில் இல்லாமலேயே படம் முடிகின்றது. (சுவாரஸ்யம் வெளிப்பட்டுவிடக்கூடாது என்பதால் சில விசயங்களை நேரடியாகக் கூற முடியவில்லை)

ஒளிப்பதிவு மற்றும் இசை

44184-Enakkul-Oruvan-Movie-Stills-19

கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவும், சந்தோஷ் நாராயணன் இசையும் இந்த படத்திற்கு பக்க (கா) பலம் சேர்த்திருக்கின்றன.

அவ்வளவு அழகாக இருக்கும் சித்தார்த்தையும், தீபாவையும் ஏன் தான் கருப்பு வெள்ளையில் காண்பிக்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது, அதற்கான காரணம் கடைசியில் தான் தெரிந்தது. ஒரு சில மாண்டேஜ் காட்சிகளை மட்டும் மீண்டும் வண்ணத்தில் காட்டியதால் ஒரு சின்ன திருப்தி.

சந்தோஷ் நாராயண் பின்னணி இசையும், ‘பிரபலமாகவே’, ‘பூ அவிழும்’, ‘குட்டிப்பூச்சி’ போன்ற பாடல்களில் அதன் வரிகளும் கேட்டவுடன் மனதில் வந்து நச்சென்று ஒட்டிக்கொள்கின்றன. முத்தமிழ், கணேஷ்குமார், விவேக் ஆகியோர் பாடல் வரிகள் எழுதியுள்ளனர்.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ‘எனக்குள் ஒருவன்’ – பார்த்து ரசிக்க வேண்டிய கனவு…

– ஃபீனிக்ஸ்தாசன்