வாஷிங்டன், மார்ச் 7 – செவ்வாய் கிரகத்தில் பல பில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமியின் ஆர்டிக் கடலை விட மிக பெரிய கடல் இருந்ததற்கான புதிய ஆதாரம் கிடைத்திருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நாசா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “4.3 பில்லியன் வருடங்களுக்கு முன்னாள், செவ்வாய் கிரகத்தில் பூமியின் ஆர்டிக் கடலை விட மிக பெரிய கடல் இருந்துள்ளது. அது ஒட்டுமொத்த கிரகத்தின் மிகப் பெரிய நீர் ஆதாரமாக இருந்துள்ளது. எனினும் காலப்போக்கில் சுமார் 87 சதவீம் நீர் மறைந்துவிட்டது” என்று கூறியுள்ளனர்.
செவ்வாய் கிரகம் குறித்து ஆறு ஆண்டுகள் தொடர்ச்சியான ஆராய்ச்சியின் முடிவில், அங்கு கடல் இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ள நிலையில், செவ்வாயில் நீர் இருக்கிறதா, இல்லையா என்ற விவாதத்திற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது அங்கு இரண்டு விதமான நீர் மூலக்கூறுகள் கண்டுபிடிக்கபட்டுள்ளன. பூமியில் இருப்பது போல இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும், ஒரு ஆக்சிஜன் அணுவுடன் கூடிய H2O மூலக்கூறும், ஒரு ஹைட்ரஜன் மற்றும் டியூட்ரியம் என்ற அணுவை கொண்ட HDO என்ற மற்றொரு மூலக்கூறும் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நாசா, அடுத்த நடவடிக்கையாக கிடைத்துள்ள விவரங்களை உறுதிபடுத்தவும், மேற்கொண்டு விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளது.