Home இந்தியா இந்தியாவில் பேச்சுரிமை இல்லை – ஆவணப்பட இயக்குனர் லெஸ்லி காட்டம்!

இந்தியாவில் பேச்சுரிமை இல்லை – ஆவணப்பட இயக்குனர் லெஸ்லி காட்டம்!

537
0
SHARE
Ad

Producer - Lesle Udwin(C)புது டெல்லி, மார்ச் 7 – ‘இந்தியாவின் மகள்’ ஆவணப்படத்திற்கு தடை விதித்துள்ளதன் மூலம் பேச்சுரிமையை பறிக்கும் செயலில் இந்தியா ஈடுபடுகிறது என அப்படத்தின் இயக்குநர் லெஸ்லி உட்வின் கூறியுள்ளார்.

லெஸ்லி உட்வின் இயக்கத்தில் உருவான ‘இந்தியாவின் மகள்’ (Storyville: India’s Daughter) ஆவணப்படம், சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மார்ச் 8-ம் தேதி அன்று உலகம் முழுவதும் ஒளிபரப்பப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

அந்த ஆவணப்படத்தில் நிர்பயா கற்பழிப்பு வழக்கின் குற்றவாளி முகேஷ் சிங்கின் பேட்டி இடம்பெற்று இருந்தது. அதில் அவர், “பலாத்காரம் நடக்கும்போது அந்தப் பெண் திருப்பி சண்டை போட்டிருக்க கூடாது.

#TamilSchoolmychoice

அமைதியாக இருந்து, பலாத்காரத்திற்கு அனுமதித்திருக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். தண்டனை பெற்றும் அவர் மனம் திருந்தாததால், மிகப்பெரிய அளவில் சர்ச்சை வெடித்தது.

இதனை சரிசெய்ய  இந்திய அரசு ஆவணப்படத்தை தடை செய்ய முயன்றது. அதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாகவே (5-ம் தேதி) பிரிட்டனில் அந்த ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது.

பிரிட்டனில் ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டதைத் தொடர்ந்து இந்திய அரசு, பிபிசி நிர்வாகத்தை கடுமையாக எதிர்த்ததோடு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியது.

இது தொடர்பாக லெஸ்லி லண்டனில் இருந்து அளித்த பேட்டி ஒன்றில், “நான் ஏற்கெனவே பலமுறை கூறியதைத்தான் இப்போதும் சொல்கிறேன். இந்த ஆவணப்படத்தின் கரு, இந்தியாவில் மட்டும் இருக்கும் பிரச்சினையை குறித்தது அல்ல. இப்பிரச்சினை உலகமெங்கும் இருக்கிறது.”

“இந்த ஆவணப்படம், மிகப்பெரிய மாற்றத்திற்கான ஒரு உந்து சக்தியாக இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். இது சமகாலத்தில் நடந்த ஒரு குற்றத்திற்கு எதிரான மிகப் பெரிய போராட்டம்”.

“இப்பெருங்குற்றத்திற்கு எதிராக இந்திய மக்களின் நடத்திய போராட்டத்தை பார்த்து நான் நெகிழ்ந்து போயிருந்தேன். ஆனால், இப்போது விதிக்கப்பட்டுள்ள தடையானது, இந்தியா பேச்சுரிமைக்கு எதிராக செயல்படுவதைக் காட்டுகிறது” என்று அவர் கூறியுள்ளார்.

பிபிசியில் ஒளிபரப்பப்பட்ட ஆவணப்படத்தை 3,00,000 பேர் பார்த்துள்ளனர். ஆவணப்படத்திற்கு எதிராக பிபிசி நிறுவனத்தின் மீது 32 புகார்கள் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.