அபுதாபி, மார்ச் 10 – முழுக்க முழுக்க சூரிய ஒளியில் இயங்கும் விமானம், தனது முதல் உலக சுற்றுப் பயணத்தை அபுதாபியில் நேற்று அதிகாலை தொடங்கியது.
அங்கிருந்து ஓமன் தலைநகர் மஸ்கட் செல்லும் இவ்விமானம் இன்று இந்தியாவின் அகமதாபாத் மற்றும் வாரணாசி நகரங்களுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் அந்த விமானத்தின் பயணம் சீனா, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு தொடரும்.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பெர்ட்ரண்ட் பிக்கார்டு மற்றும் ஆண்ட்ரே போர்ஷ்பெர்க் ஆகிய இருவரும் வடிவமைத்துள்ள ‘சோலார் இம்பல்ஸ் 2’ (Solar Impulse 2) என்று இந்த விமானத்தை, வர்த்தக பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்த முதற்கட்ட பரிசோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன் படி, உலகம் முழுவதும் 35 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை, 617 மணி நேரத்தில் சுற்றி வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பயணம் குறித்து சோலார் இம்பல்ஸ் தலைவரும், விமானியுமான பெர்ட்ரண்ட் பிக்கார்டு கூறுகையில்,”எங்களின் சாகசப் பயணம் இங்கு தொடங்குகிறது. ஒரு இலக்கிலிருந்து மற்றொரு இலக்கை அடைந்தவுடன் 20 நிமிடம் மட்டும் ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக நாங்கள் மனதளவிலும், உடலளவிலும் தயாராகி உள்ளோம்.”
“இந்த விமானத்தை பொருத்தவரையில் விமானி அறை தான் தற்சமயம் எங்கள் வீடு. எங்களின் உணவு, ஓய்வு என அனைத்தையும் இங்கு தான் கழிக்க உள்ளோம்” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
இந்த விமானத்தை பொருத்தவரையில் எரிபொருள் எதுவும் தேவைப்படாததால், காற்றை மாசுபடுத்தும் புகையை வெளியிடாது. மேலும், இரவிலும், பகலிலும் பறக்கும் திறனுடையது.
இந்த விமானம் பறக்கும்பொழுது விமானியால் அதன் ‘காக்பிட்டில்’ (Cockpit) எழுந்து நிற்க முடியாது. ஓய்வறைக்கு செல்லும்போது மட்டும் இருக்கையை தள்ளிவிட்டுக்கொள்ள முடியும்.
விமானிகளின் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும், பகல் நேரங்களில் வெப்பத்தை சமாளிப்பதற்காக 28000 அடி உயரத்திலும், இரவு நேரங்களில் 5000 அடி உயரத்திலும் விமான பறக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக, விமானம் புறப்பட்ட இருந்த நேரத்தில், காக்பிட்டில் இருந்த விமானிகளுக்கு மொனாக்கோ இளவரசர் ஆல்பர்ட் இணையம் மூலம் வாழ்த்து தெரிவித்தார்.
இன்று இந்தியா செல்லும் இந்த விமானம் பின்னர் அங்கிருந்து பர்மா, சீனா ஆகிய நாடுகளுக்கும், 5 நாட்கள் பயணத்திற்கு பிறகு ஹவாய் தீவு, அமெரிக்காவில் உள்ள போனிக்ஸ், அரிசோனா மற்றும் நியூயார்க் ஆகிய நகரங்களை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னர், மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு அட்லான்டிக் பெருங்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கும், ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பயணம் செய்து இறுதியாக அபுதாபிக்கே திரும்பும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதன் காணொளியை கீழே காண்க: