இஸ்லாமாபாத், மார்ச் 10 – 2016-ல் பாகிஸ்தானில் நடைபெறும் சார்க் மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் மோடி பாகிஸ்தான் வருவார் என அந்நாடு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பின் இரண்டு நாள் மாநாடு, பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமபாத்தில் கடந்த சனிக்கிழமை தொடங்கியது.
இதில் கலந்து கொண்ட பாகிஸ்தான் பிரதமரின் வெளியுறவுத்துறை ஆலோசகர் சர்தாஜ் ஆசிஸ், சார்க் மாநாடு பற்றி கூறுகையில், “பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தான் வருவார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே இரு நாட்டு வெளியுறவுத்துத்துறை செயலர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை பற்றி அவர் கூறுகையில், “இந்திய வெளியுறவுத்துத்துறை செயலர் ஜெய்சங்கர் கடந்த 3-ம் தேதி பாகிஸ்தான் வந்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
எனினும், அடுத்தகட்ட பேச்சுவார்த்தையின் தேதியை நிர்ணயிக்க இரு நாடுகளும் தவறிவிட்டன. ஆனால் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தும்போதெல்லாம், அனைத்து விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்க நாங்கள் தயாராக உள்ளோம்.”
“இரு நாடுகள் இடையே இருக்கும் நம்பிக்கை குறைவு காரணமாகத் தான் பிரச்னைகள் நீடிக்கின்றன. அது சீரானவுடன் இரு நாட்டு உறவில் படிப்படியான முன்னேற்றம் இருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.