கோலாலம்பூர், மார்ச் 13 – மின்னல் பண்பலையின் நிகழ்ச்சிகள் என்றாலே இளமை புதுமை இனிமை தான்…. அதிலும் குறிப்பாக மின்னல் அறிவிப்பாளர்கள், திரைப்படங்களில் நடிக்கும் அளவிற்கு அழகும், திறமையும், பேச்சாற்றலும் கொண்டிருப்பது கூடுதல் சிறப்பு.
மின்னல் அறிவிப்பாளர்கள் மக்களோடு மக்களாக இணைந்து நிகழ்ச்சிகளை கலகலப்பாகவும், விறுவிறுப்பாகவும் கொண்டு செல்வதை பல நிகழ்ச்சிகளில் கண்டு வருகின்றோம்.
அந்த வகையில், கடந்த மார்ச் 8-ம் தேதி மகளிர் தினத்தன்று கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் மின்னல் பண்லையின் ‘ஆனந்த தேன்காற்று’ சார்பாக அதன் அறிவிப்பாளர்கள் நடத்திய ‘அதிரடிப் பயணம்’ மக்கள் மத்தியில் பெருமளவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அன்றைய நேரத்தில் பெய்த கன மழையையும் பொருட்படுத்தாமல் சுமார் 200-க்கும் மேற்பட்ட மக்கள், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அறிவிப்பாளர்கள் நடத்திய போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றனர்.
மின்னல் பண்பலையின் அறிவிப்பாளர்களான தெய்வீகன், ஹரி, மோகன், ரவின் ஷண்முகம், சுகன்யா, புவனேஸ்வரி மற்றும் சத்தியா ஆகியோர் இந்நிகழ்ச்சியினை கலகலப்பாகவும், வெற்றிகரமாகவும் நடத்தினர்.
இந்நிகழ்ச்சிக்கு ‘என்ரிக்கோ’ நிறுவனம் ஆதரவு வழங்கியதுடன், போட்டிகளில் வெற்றியடையும் மகளிருக்கு பரிசுகளையும் வழங்கியது.
மகளிர் தினம் என்பதால், மகளிர் மட்டுமே கலந்து கொள்ளும்படியாக அழகுப்போட்டிகள் உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
(படம்: மின்னல் பேஸ்புக்)
மழை நேரம் என்றாலும், ஹைடாப் நிறுவனம் வழங்கிய சூடான சுவையான தேநீர், இந்நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு சுகமான அனுபவத்தைக் கொடுத்தது. இந்நிகழ்ச்சியின் இறுதியில், அங்கிருந்த மகளிர் அனைவருக்கும் ரோஜா மலர் கொடுக்கப்பட்டு வாழ்த்துகள் கூறப்பட்டன.
அதே வேளையில், அன்றைய நாள் எம்எச்370 விமானம் மாயமாகி ஓர் ஆண்டு நிறைவு பெற்றதால், மெழுகுவர்த்தி ஏற்றி நினைவாஞ்சலியும் நடத்தப்பட்டது.
– ஃபீனிக்ஸ்தாசன்