Home இந்தியா இன்று காலை கொழும்பு சென்றார் பிரதமர் மோடி!

இன்று காலை கொழும்பு சென்றார் பிரதமர் மோடி!

519
0
SHARE
Ad

modi_கொழும்பு, மார்ச் 13 – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக, இன்று அதிகாலை 5.30 மணியளவில் கொழும்பு சென்றார். சிறப்பு விமானம் மூலம், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இந்தியப் பிரதமரை, இலங்கை துணை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேரில் சென்று வரவேற்றார்.

இதையடுத்து வாகனப் பேரணியாக அவர் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கொழும்பில் இன்று தங்கியிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன, துணை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத் தலைவர்கள் மற்றும், தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

மேலும், இன்று பிற்பகல் 3.15 மணியளவில் இலங்கை நாடாளுமன்றத்திலும் இந்தியப் பிரதமர் உரையாற்றவுள்ளார். இந்தியப் பிரதமர்களாக இருந்த ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, மொராய்ஜி தேசாய் ஆகியோருக்குப் பின்னர், இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் நான்காவது இந்தியப் பிரதமர் என்ற பெருமையை மோடி பெறவுள்ளார்.

#TamilSchoolmychoice

1987ஆம், ஆண்டு இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி இலங்கைக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தையடுத்து, 28 ஆண்டுகளுக்குப் பின்னர், இந்தியப் பிரதமர் ஒருவர் இலங்கைக்கு அரசு முறைப் பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று கொழும்பில் பேச்சுவார்த்தை நடத்தும் இந்தியப் பிரதமர், நாளை யாழ்ப்பாணம், அனுராதபுர, மன்னார் ஆகிய இடங்களுக்கும் செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.