Home தொழில் நுட்பம் சீன சந்தைகளில் போலி ஆப்பிள் வாட்ச்கள்!

சீன சந்தைகளில் போலி ஆப்பிள் வாட்ச்கள்!

623
0
SHARE
Ad

MT0549B-1பெய்ஜிங், மார்ச் 13 – ‘ஆப்பிள் வாட்ச்’ (Apple Watch) பற்றிய எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், சீனாவில் ஆப்பிள் வாட்சின் விற்பனை சூடு பிடித்துள்ளதாக தொழில்நுட்ப பத்திரிக்கைகளுக்கு தகவல் வந்தது.

அதிர்ச்சி அடைந்த பத்திரிக்கைகள், சீன சந்தைகளில் நடத்திய விசாரணையில், அங்கு விற்பனை செய்யப்படுவது ஆப்பிள் போலி திறன்கைக்கடிகாரங்கள் என்ற உண்மை தெரிய வந்துள்ளது.

ஆப்பிள் தயாரிப்புகளில் அதிக அளவிலான போலிகள் சீனாவில் தயாரிக்கப்படுவது உலக அறிந்த ஒன்று. ஐபோன் 6 திறன்பேசிகள் சீனாவில் வெளியிட தாமதமான நிலையில், அதே விலையில் பல்வேறு போலிகள் பயனர்களிடத்தில் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோன்ற நிலை தற்போது ஆப்பிள் வாட்ச்சிற்கும் ஏற்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இது ஆப்பிள் பிரியர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் சீனாவின் தென் பகுதியில் உள்ள ஷென்ஜென் நகரில் உள்ள மின்னணு சந்தைகளில் போலி ஆப்பிள் வாட்ச்கள் எந்தவித தடையும் இன்றி தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த போலி திறன்கைக்கடிகாரம் பார்ப்பதற்கு ஆப்பிள் வாட்ச் போலவே காட்சி அளிப்பதாக சி.என்.என் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. அதன் ‘கிரவுன் பகுதி’ (Crown Part) உள்ளிட்ட நுணுக்கமான அம்சங்கள் அப்படியே பிரதியெடுத்து வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

apple-watchesஅண்டிரொய்டு தளத்தில் இயங்கும் இவ்வகை திறன் கைக்கடிகாரங்கள் ‘ஏஐ வாட்ச்’ (AI Watch) என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், அதன் முகப்பில் ஆப்பிள் நிறுவனத்தின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதால் பயனர்கள் மிக எளிதாக ஏமாந்து விடுகின்றனர்.

இது பற்றி பிரபல திறன் கடிகாரங்களை தயாரிக்கும் ஒமேட் நிறுவனத்தின் தலைவர் லாரென்ட் லீ பென் கூறுகையில், “பிரபல நிறுவனங்களின் போலிகளை தயாரிப்பவர்களை ‘ஷான்சாய்’ (shanzhai) என்று குறிப்பிடுகின்றனர்.

இவர்கள் தயாரிக்கும் போலிகள் பல சமயங்களில் வல்லுனர்களால் கூட கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு இருக்கும். இதற்கு முன்பும் ஆப்பிளின் தயாரிப்புகள் போலியாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவை அனைத்தும் சீனாவை தவிர வேறு நாடுகளில் முன்பே வெளியாகி இருக்கும்”

“ஆனால் ஒரு தாயாரிப்பு உலக சந்தைகளில் வெளியாவதற்கு முன்பு போலிகள் தயாரிக்கப்படுவது இதுவே முதல் முறை” என்று அவர் கூறியுள்ளார். இதில் அதிர்ச்சி அளிக்கும் செய்தி என்னவென்றால், இந்த போலிகளின் விளம்பரங்கள் சீனாவின் முன்னணி இணைய வர்த்தக நிறுவனமான அலிபாபாவிலும் இடம்பெற்றுள்ளது என்பதுதான்.