கோலாலம்பூர், மார்ச் 16 – பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இசா இன்றிரவு கோலாலம்பூர் ஜிஞ்சாங் காவல் நிலையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார். தொடர்ந்து அவரைத் தடுத்து வைப்பது தொடர்பான விசாரணை நாளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இன்றிரவு திங்கட்கிழமை இரவு முழுவதையும் அவர் ஜின்ஜாங் காவல் நிலையத்திலேயே கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
திங்கட்கிழமை காலை தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் நூருல் இசா. அவர் கைதான உடனேயே டாங் வாங்கி காவல் நிலையத்தின் ஐந்தாவது மாடியிலிருந்து தனது ஆதரவாளர்களை நோக்கி கையசைக்கும் படமும், தனது குழந்தைகளை அரவணைப்பது போன்ற படமும் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டது.
தேச நிந்தனைச் சட்டத்தின் பிரிவு, 4(1) கீழ் நூருல் இசா கைது செய்யப்பட்டுள்ளார். மார்ச் 7ஆம் தேதி நடைபெற்ற கித்தா லவான் பேரணி தொடர்பாக டாங் வாங்கி காவல் நிலையத்தில் விளக்கம் அளித்த பின்னர் திங்கட்கிழமை மாலை 3.30 மணியளவில் அவர் கைதானார்.
“புக்கிட் அம்மான் துணை தலைமை இயக்குநரின் உத்தரவின் பேரில் நான் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக ஏஎஸ்பி முனியாண்டி என்னிடம் தெரிவித்தார்,” என்று சுமார் 3.25 மணியளவில் நூருல் இசா தனது நட்பு ஊடக வலைத் தளப் பக்கத்தில் பதிவிட்டார்.
நூருல் இசா நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் எந்த குறிப்பிட்ட பகுதிகள் தேச நிந்தனைக்கு எதிரானது என்று காவல்துறை இன்னும் தங்களிடம் தெரிவிக்கவில்லை என பிகேஆர் தகவல் தொடர்பு இயக்குநர் பஃமி பட்சில் தெரிவித்தார்.
சமூகப் போராட்டவாதியும் பிஎஸ்எம் கட்சியைச் சேர்ந்தவருமான ஜெயதாஸ் உள்ளிட்ட பலர் ஜிஞ்சாங் காவல் நிலையம் முன் நூருலுக்கு ஆதரவாகக் கூடியுள்ளனர்.
இதற்கிடையில் நூருல் இசா காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஜிஞ்சாங் காவல் நிலையத்திற்கு வெளியே சுமார் 500 பேர் மெழுகுவர்த்தி ஏந்தி நூருலுக்கு ஆதரவாக எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
படங்கள்: முகநூல்