Home நாடு அன்வார் குற்றம் சாட்டப்பட்டது ஏமாற்றமளிக்கிறது: அமெரிக்கா

அன்வார் குற்றம் சாட்டப்பட்டது ஏமாற்றமளிக்கிறது: அமெரிக்கா

457
0
SHARE
Ad

வாஷிங்டன், மார்ச் 16 – ஓரினப் புணர்ச்சி வழக்கில் அன்வார் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அன்வார் குற்றவாளி அல்ல எனத் தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர், மலேசிய அரசு மேல்முறையீடு செய்த பிறகே இத்தகைய தீர்ப்பு வந்திருப்பதாக குறிப்பிட்டுள்ள வெள்ளை மாளிகை, தங்களது இந்த நிலைப்பாட்டை மலேசிய அரசுக்கு அறிக்கை வாயிலாகவும், இதர பரிமாற்றங்கள் வழியாகவும் வெளிப்படுத்தி இருப்பதாகக் கூறியுள்ளது.

articlesanwar-ibrahim3-270613_600_399_100

டத்தோஸ்ரீ அன்வாரை விடுவிக்க வலியுறுத்தி இணையம் வழி அளிக்கப்பட்ட முறையீட்டு விண்ணப்பம் (petition) குறித்து கருத்து தெரிவித்தபோதே வெள்ளை மாளிகை இவ்வாறு குறிப்பிட்டது.

#TamilSchoolmychoice

அந்த முறையீட்டில் மொத்தம் 113,806 பேர் கையெழுத்திட்டுள்ளனர். மலேசியாவில்   சட்டத்தின் ஆட்சி குறித்தும், மலேசிய நீதி அமைப்பு குறித்தும் தீவிர அக்கறை கொண்டிருப்பதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

“இருதரப்புக்கும் பரந்த, வலுவான உறவுகள் உள்ளன. அதன் அடிப்படையில் ஆசிய அளவிலும், உலகளவிலும் இருநாடுகளும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு ரீதியில் எதிர்கொள்ளும் விவகாரங்கள் தொடர்பில் ஒத்துழைப்பை மேலும் விரிவாக்குவதில் உறுதியாக உள்ளோம்.  அதேவேளையில், ஜனநாயகம் மற்றும் நீதித்துறையின் மீதான நம்பிக்கையை ஊக்குவிக்கும் விதமாக சட்டத்தின் ஆட்சியை நியாயமாக, வெளிப்படையாக, அரசியல் சார்பின்றி செயல்படுத்த வேண்டுமென மலேசிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்,” என அமெரிக்கா கூறியுள்ளது.

அரசியல் சார்பு, இனம், மதம் ஆகியவற்றைக் கடந்து அனைத்து தரப்பு மக்களுக்குமான மனித உரிமைகளை நிலைநாட்டும் நாடுகள் செழிப்பாகவும், நிலைத்தன்மையுடனும் இருப்பதை வரலாறு எடுத்துக்காட்டுவதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

தங்களுக்கு சமர்ப்பிக்கப்படும் முறையீடு ஒன்று போதுமான ஆதரவைப் பெறும் எனில் அந்த மேல் முறையீடு குறித்து தாங்கள் ஆய்வு செய்வோம் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அதன் பின்னர் அமெரிக்க அரசாங்கம் அந்த மேல்முறையீட்டை சம்பந்தப்பட்ட கொள்கை வகுக்கும் நிபுணர்களுக்கு அனுப்பி ஆய்வு செய்து அதன் பின்னர் அதிகாரபூர்வ பதிலை வழங்கும்.