மாஸ்கோ, மார்ச் 17 – கிரிமியா இணைப்பில் சிக்கல் ஏற்பட்டிருந்தால், அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவும் ரஷ்யா தயங்கி இருக்காது என அந்நாட்டு அதிபர் புடின் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு உக்ரைனின் கிரிமியா பகுதியை தன்னுடன் இணைத்து கொண்ட ரஷ்யா, அந்த இணைப்பின் காரணமாக அமெரிக்கா உட்பட பல உலக நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்தது.
மேலும், உக்ரைனிலும் கலகக்காரர்களை தூண்டி விட்டு பெரும் போராட்டங்களை முன்னெடுத்து நடத்தியது. இதன் காரணமாக ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே நேரடியாக போர் மூளும் சூழ்நிலையும் ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் புடின் பேசும் ஆவணப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவர், “கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைப்பதால் என்ன மாதிரி விளைவுகள் ஏற்படும் என்று சரியாக சொல்ல முடியவில்லை. எனவே, இராணுவத்தை போருக்கு தயாராக இருக்கும்படி உத்தரவிட்டுயிருந்தேன்” என்று கூறியுள்ளார்.
அப்போது பத்திரிக்கையாளர் அணு ஆயுதங்களை பயன்படுத்தவும் தயாராக இருந்தீர்களா? என்று கேட்டதற்கு, “ஆமாம். தேவை ஏற்பட்டிருந்தால் அணு ஆயுதங்களை பயன்படுத்தவும் தயங்கி இருக்க மாட்டேன். அவர்களை எதற்கும் தயாராக இருக்கும்படி உத்தரவிட்டிருந்தேன்” என்று பதில் அளித்துள்ளார்.
பல இலட்சம் உயிர்களை அழிக்கக் கூடிய அணு ஆயுதத்தை ஒருவேளை ரஷ்யா, பயன்படுத்தி இருந்தால் அது கண்டிப்பாக மூன்றாம் உலக போருக்கு வழிவகுத்திருக்கும்.
அரை நூற்றாண்டுக்கு முன்னாள் அறிவியல் பெரிய அளவில் முன்னேற்றம் அடையாத போது ஜப்பான் மீது நடத்தப்பட்ட அணு ஆயுதத் தாக்குதல் எத்தகைய விளைவை ஏற்படுத்தியது என்பது உலகறிந்த உண்மை. தற்போது, அது போன்ற தாக்குதல் மீண்டும் நிகழ்த்தப்படுமானால், எத்தகைய விளைவு ஏற்படும் என்பது கணிக்கமுடியாத ஒன்றாக உள்ளது.