கோலாலம்பூர், மார்ச் 17 – சிங்கப்பூருக்கும் கோலாலம்பூருக்கும் இடையில் தொடங்கப்படவிருக்கும் விரைவு ரயில் திட்டத்தை கைப்பற்ற சீனாவின் இரு முன்னணி ரயில் நிறுவனங்கள் முனைப்புடன் செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மலேசியா – சிங்கப்பூர் நாடுகளின் பிரதிநிதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்த இந்த திட்டத்தை செயல்படுத்த பல்வேறு நாடுகளின் இரயில் நிறுவனங்கள் முயன்று வருகின்றன.
இந்நிலையில் ‘சீனா.ஒஆர்ஜி.சிஎன்’ (China.org.cn) இணையதளம், “மலேசியா-சிங்கப்பூர் இடையிலான இரயில் திட்டத்தை கைப்பற்ற, சீனாவின் இரு முன்னணி ரயில் நிறுவனங்களான சீனா ரயில்வே கட்டுமான கூட்டமைவு (China Railway Construction Corporation) மற்றும் சீன தெற்கு இரயில்வே (China Southern Railway) ஆகியவை முயன்று வருகின்றன” என்று தெரிவித்துள்ளது.
சுமார் 4,000 கோடி ரிங்கிட் மதிப்புடைய இந்த திட்டம், எதிர்வரும் ஜூன் மாதம் ஏலத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் இரு நாடுகளுக்கு இடையே உள்ள 5 மணி நேர பயண நேரம், 90 நிமிடங்கங்களாக குறையும் என்று கூறப்படுகிறது.
இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையே உள்ள பரஸ்பர வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகள் பெருமளவில் மேம்படும். கடந்த 15 ஆண்டுகளாக திட்ட அளவிலேயே இருந்து வந்த இந்த விரைவு ரயில் சேவை தற்போது செயல்படுத்தப்பட இருப்பதால், சீன நிறுவனங்கள் மட்டுமல்லாமல் ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் இதனை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.