கோலாலம்பூர், மார்ச் 18 – (மஇகா – சங்கப் பதிவகம் இடையிலான வழக்கில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வழங்கப்படவிருக்கும் தீர்ப்பு குறித்தும் அதனைத் தொடர்ந்து மஇகாவில் எத்தகைய அரசியல் சூழ்நிலைகள் உருவாகும் என்பது குறித்தும் செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் விவரிக்கும் கட்டுரை)
வெள்ளிக்கிழமை வழங்கப்படவிருக்கும் மஇகா-சங்கப் பதிவகம் இடையிலான வழக்கின் தீர்ப்பு எப்படியிருக்கும் என்பது குறித்து ஆரூடம் கூறும் முன்னால், இதுவரை இந்த வழக்கு எந்த திசையில் சென்றது என்பது குறித்து சுருக்கமாகப் பார்க்கலாம்.
சங்கப் பதிவகம் வழங்கிய ஒரு கடிதத்தின்படி மஇகாவின் 2013 கட்சித் தேர்தல்கள் செல்லாது என்பதும், அதற்குப் பதிலாக மறு தேர்தல்கள் நடைபெற வேண்டும் என்பதும் இல்லாவிட்டால் கட்சியின் பதிவு ரத்து செய்யப்படும் என்பதும்தான் இன்றைய நிலைமை.
இந்த சூழ்நிலையில் சங்கப் பதிவகத்தின் முடிவுகள் செல்லாது என்றும், கட்சியின் உள்விவகாரங்களில் தலையிட அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் பத்து தொகுதி தலைவர் ஏ.கே.இராமலிங்கம் ஒரு வழக்கும், மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலு, உதவித் தலைவர்கள் டத்தோ எஸ்.சோதிநாதன், டத்தோ எஸ்.பாலகிருஷ்ணன், ஆகியோர் உள்ளிட்ட குழு ஒன்று தொடுத்திருக்கும் மற்றொரு வழக்கும் தற்போது விசாரணையில் இருக்கின்றன.
ஏ.கே.ராமலிங்கம் (படம்) சார்பில் செல்வம் சண்முகமும், பழனிவேல் குழுவினரின் சார்பில் ஜகதீஷ் சந்திராவும் வழக்கறிஞர்களாக ஆஜராகியுள்ளனர்.
ஒரு கட்சியின் தேசியத் தலைவரே – அதுவும் தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியின் தேசியத் தலைவரே – சங்கப் பதிவகத்திற்கு எதிராகவும், உள்துறை அமைச்சருக்கு எதிராகவும் தொடுத்திருக்கும் சரித்திரப் பிரசித்தி பெற்ற வழக்கு இது.
இந்த வழக்குகள் சங்கப் பதிவகத்தின் முடிவை சீராய்வு செய்யும் மனுக்கள் (Judicial review) என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக, ஓர் அரசாங்க இலாகாவோ, அமைச்சரோ ஒரு முடிவு செய்தால் அதனால் பாதிக்கப்படும் நபர் இவ்வாறு சீராய்வு மனுவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கலாம்.
ஆனால், அவ்வாறு போகிறவர்கள், வருபவர்கள் எல்லாம் அரசாங்க முடிவுகளை எதிர்த்து வழக்கு தொடுப்பதைத் தடுப்பதற்காக, ஒரு நியதியை சட்டம் வகுத்திருக்கின்றது. அதாவது, இதுபோன்ற வழக்குக்கு முதலில் நீதிமன்ற முன் அனுமதியைப் பெற வேண்டும்.
நீதிமன்றம் ஒரு வழக்கின் உள்ளடக்கத்தை விசாரிக்கும் முன்னால், அந்த வழக்கு ஏற்றுக் கொள்ளத் தக்கதுதானா, அந்த வழக்கைத் தொடுப்பவருக்கு அந்த விவகாரத்தில் தலையிடுவதற்கு உரிமை இருக்கின்றதா என்பது போன்ற பூர்வாங்க அம்சங்களை ஆராய்ந்து உண்மையிலேயே இது நியாயமான வழக்குதான் என்பதை உறுதி செய்து கொண்ட பின்னர்தான் நீதிமன்றம் அத்தகைய வழக்குக்கு அனுமதி வழங்கும். அதன் பின்னரே வழக்கின் உள்ளடக்கங்கள் ஆய்வு செய்யப்பட்டு ஒரு முடிவு சட்டத்திற்குள் செய்யப்பட்டதா அல்லது சட்டத்திற்குப் புறம்பாக செய்யப்பட்டதா என்ற தீர்ப்பு வழங்கப்படும்.
இந்த சட்ட நியதிகளின்படிதான் மஇகாவின் இரண்டு வழக்குகளும் நீதிமன்றத்தின் முன் அனுமதியைக் கோரி தொடுக்கப்பட்டிருக்கின்றன.
பூர்வாங்க ஆட்சேபணைகள்
மஇகா வழக்கில் கடந்த திங்கட்கிழமை சங்கப் பதிவகத்தின் சார்பில் வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர் சூசானா அட்டான், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென பூர்வாங்க ஆட்சேபங்கள் சிலவற்றை முன் வைத்திருக்கின்றார்.
அதன்படி, இந்த வழக்கை விசாரிக்கவோ, சங்கப் பதிவக முடிவுகளை மறு ஆய்வு செய்யவோ, நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்பதும், இதுபோன்ற வழக்குகளைத் தொடுப்பதற்கு வாதிகளுக்கு (Plaintiffs) உரிமையில்லை, என்பதும்தான் அந்த பூர்வாங்க ஆட்சேபங்களின் சாராம்சம்.
எந்த ஒரு வழக்கும் முழுமையான நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்கு முன்னால் இதுபோன்று பூர்வாங்க ஆட்சேபணைகள் தெரிவிப்பது வழக்கறிஞர்களின் வழக்கமான வியூகம்.
சங்கப் பதிவக வழக்கறிஞர் சமர்ப்பித்திருக்கும் அந்த ஆட்சேபணைகளின் மற்றொரு முக்கிய கூறு சங்கப் பதிவகமோ உள்துறை அமைச்சோ இன்னும் இந்த விவகாரம் குறித்து இறுதி முடிவு எடுக்கவில்லை, அதற்கு முன்பாகவே வாதிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து விட்டார்கள் என்பது.
இத்தகைய சீராய்வு மனுக்களை விசாரிப்பதற்கு முன்பாக – அதில் தலையிடுவதற்கு முன்பாக – பொதுவாக நீதிபதிகள் எடுக்கப்பட்டது இறுதி முடிவுதானா, வாதிக்கு இறுதி முடிவைத் தெரிந்து கொள்ள இன்னும் ஏதாவது வாய்ப்புகள் இருக்கின்றதா என்பது குறித்து நிர்ணயம் செய்வார்கள்.
அவ்வாறு இன்னும் இறுதி வாய்ப்புகள் இருப்பின் அவற்றையெல்லாம் பெற்றுக் கொண்ட பின்னர்தான் – அந்த இறுதி முடிவுகளின் மீது தனக்கு திருப்தியில்லை என்னும்போதுதான் வாதியின் சீராய்வு மனுவை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும்.
சங்கப் பதிவகம் கடைசியாகக் கொடுத்த (மறுதேர்தல் என்ற) முடிவு மீது வாதிகள் அதிருப்தி கொண்டால், முப்பது நாட்களுக்குள் அவர்கள் அமைச்சருக்கு மேல் முறையீடு செய்யலாம், அமைச்சரின் முடிவே இறுதியானது, அந்த அமைச்சரின் முடிவை மறு ஆய்வு செய்வதற்குத்தான் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கின்றது என்பதும் பூர்வாங்க ஆட்சேபணையின் ஓர் அம்சம்.
பூர்வாங்க ஆட்சேபணைகளை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டால்…
இந்நிலையில், வரும் வெள்ளிக்கிழமை, இந்த பூர்வாங்க ஆட்சேபணைகளை நீதிபதி டத்தோ அஸ்மாபி முகமட் ஏற்றுக் கொண்டால், இந்த இரண்டு வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படும். இது நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன என்பது இந்த வழக்கைக் கண்காணித்து வரும் ஒரு சில வழக்கறிஞர்களின் கணிப்பாக இருக்கின்றது.
வழக்குகளைத் தள்ளுபடி செய்யும் முடிவை எதிர்த்து வழக்கைத் தொடுத்தவர்கள் வேண்டுமானால், மேல் முறையீட்டு நீதிமன்றத்திற்கு முறையீடு செய்யலாம். மேல் முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பு கிடைக்கும்வரை சங்கப் பதிவகத்தின் முடிவுகளை அமுல்படுத்தக் கூடாது என்று அவர்கள் தடையுத்தரவு ஒன்றையும் பெறவேண்டும்.
இல்லாவிட்டால் சங்கப் பதிவகத்தின் மறு தேர்தல் நடத்தும் முடிவுகளை மஇகா அமுல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
வழக்கு தள்ளுபடி செய்யப்படுமானால், அதனை எதிர்த்து பழனிவேல் தரப்பினர் மேல்முறையீடு செய்யவில்லை என்றால், மஇகா, மீண்டும் சங்கப் பதிவகத்தின் உத்தரவுப்படி மறுதேர்தல் நடத்த வேண்டும்.
பூர்வாங்க ஆட்சேபணைகள் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால்…
ஆனால், சங்கப் பதிவக வழக்கறிஞரின் பூர்வாங்க ஆட்சேபணைகளை நீதிமன்றம் நிராகரித்தால், அதன்பின்னர், இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாமா என்பது குறித்த விவாதங்கள் மற்றொரு தேதியில் நடைபெறும்.
அதாவது (leave for judicial review) இந்த வழக்கிற்கு அனுமதி வழங்கலாமா என்பது குறித்த வாதப் பிரதிவாதங்களை செவிமெடுத்து, அவ்வாறு அனுமதி வழங்கப்பட்ட பின்னரே முழுமையான வழக்கு நடைபெறும்.
அப்போதும், அனுமதி மறுத்து வழக்கைத் தள்ளுபடி செய்யும் முடிவை நீதிமன்றம் செய்வதற்கு வாய்ப்பிருக்கின்றது.
கட்சியின் பதிவு ரத்தாகும் அபாயம் இருப்பதாலும், ஏப்ரல், மே மாதங்களில் கட்சித் தேர்தல்களை நடத்த வேண்டிய சங்கப் பதிவக உத்தரவு இருப்பதாலும், நீதிமன்றம் விரைவாகவே இந்த வழக்கை விசாரித்து முடிவுகளை வழங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதுமட்டுமல்லாமல், இப்போதெல்லாம், ஒரு வழக்கை இத்தனை நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்ற நிர்ணயம் நீதிபதிகளுக்கு இருப்பதால், வழக்கை சீக்கிரமாகவே முடிக்கவே வாய்ப்புகள் அதிகம்.
விக்னேஸ்வரனின் பிரவேசம்
வரப்போகும் நீதிமன்ற முடிவுக்கும் எனக்கும் சம்பந்தமிருக்கின்றது என்றும் எனவே, இந்த வழக்கில் தனது தரப்பு வாதங்களையும் முன்வைக்க வேண்டும் என்றும் விக்னேஸ்வரன் (படம்) செய்து கொண்டுள்ள விண்ணப்பத்தையும் நீதிமன்றம் ஏற்றும் கொண்டிருக்கின்றது.
விக்னேஸ்வரனை வழக்கறிஞர் டேவிட் குருபாதம் இந்த வழக்கில் பிரதிநிதிக்கின்றார்.
இந்த வழக்கில் இது முக்கியமான திருப்பமாகக் கருதப்படுகின்றது.
காரணம், வெள்ளிக்கிழமையன்று பூர்வாங்க ஆட்சேபங்கள் நிராகரிக்கப்பட்டு வழக்கு தொடர்ந்து நடைபெறுமானால், மறுதேர்தல் கோரிக்கை விடுத்த புகார்தாரர்கள் தரப்பிலான வாதங்களையும், கருத்துக்களையும் முன்வைக்க அவர்களுக்கு விக்னேஸ்வரன் வாயிலாக ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
எனவே, வெள்ளிக்கிழமை கிடைக்கப்போகும் இந்த வழக்கின் முடிவை வைத்துத்தான் மஇகாவின் இரண்டு அணிகளும் எத்தகைய முடிவுகளைச் செய்வார்கள் – எந்த திசைகளில் செல்வார்கள் என்பது தெளிவாகும்.
ஒன்றை இத்தருணத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
ஒரு கட்சியின் அல்லது ஒரு தலைவனின் முடிவு என்பது நீதிமன்ற அரங்கில் முடிவு செய்யப்படுவதல்ல என்பதை சம்பந்தப்பட்ட அனைவருமே உணரவேண்டும்.
மாறாக, மக்கள் மன்றம்தான் ஓர் அரசியல் கட்சி தேவையா என்பதையும், ஒரு தலைவனின் தலைமைத்துவம் தொடர வேண்டுமா என்பதையும் இறுதி முடிவு செய்யும்.
இந்த நீதிமன்ற வழக்குகளால், யாருக்கும் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை – வழக்கின் முடிவுகள் எப்படியிருந்தாலும் இதனால் அரசியல் ரீதியாக மஇகாவில் எந்த பிரச்சனையும் தீரப்போவதில்லை – என்பதுதான் பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கின்றது.
எனவே, சம்பந்தப்பட்ட மஇகா தலைவர்கள் நீதிமன்றப் போராட்டத்தைக் கைவிட்டு விட்டு, கட்சியின் நன்மை கருதி, இந்திய சமுதாயத்தின் நலன் கருதி, பேச்சுவார்த்தைகளின் வழி ஓர் இணக்கமான தீர்வு கண்டு, பொதுவான தேர்தல் குழுவின் தலைவர் ஒருவரை நியமித்து, அதற்கான தேர்தல் குழுவையும் நிர்ணயித்து,
தேர்தலின் வழி தங்களின் போராட்டத்தைத் தொடர்வதே, மஇகாவுக்கு நல்லது.
-இரா.முத்தரசன்