கோலாலம்பூர், மார்ச் 19 – ‘கிராமத்துப் பொண்ணு’ பாடலின் மூலம் அனைத்துலக அளவில் புகழ் பெற்றவர் மலேசியக் கலைஞர் விவேக் ஜி. மூன்று பேர் கொண்ட சக்ரா சோனிக் என்ற ஹிப்ஹாப் குழு மூலமாக அப்பாடலை தயாரித்ததோடு, தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் அப்பாடல் காட்சிகளை படமாக்கினார்.
அப்பாடலை புகழ் பெற்ற சோனி மியூசிக் நிறுவனம், அதிகாரப்பூர்வமாக யூடியூப்பில் வெளியீடு செய்தது.இந்நிலையில், தற்போது ‘ஐகான்’ என்ற புதிய ஆல்பம் மூலமாக மீண்டும் தனது ரசிகர்களை கவர வருகின்றார்.
இதற்கான அதிகாரப்பூர்வ செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று கோலாலம்பூர் பிரிக்பீல்ட்சில் நடைபெற்றது.
15 பாடல்களைக் கொண்ட ‘ஐகான்’ ஆல்பம் வரும் மார்ச் 21-ம் தேதி, சனிக்கிழமை, மாலை 6 மணியளவில், யுனிதார் அனைத்துலக பல்கலைக்கழகத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியீடு காணவுள்ளது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் படியாக அப்பாடல்களை அமைத்துள்ளதாக விவேக்ஜி தெரிவித்துள்ளார்.
கடந்த 15 ஆண்டுகளாக கலைத்துறையில் ஈடுபட்டு வரும் விவேக்ஜி, ‘ஐகான்’ ஆல்பத்தில் புதிய கலைஞர்களை அறிமுகம் செய்துள்ளார். இந்த ஆல்பம் பினாங்கு, சுங்கை பட்டாணி, ஈப்போ, ஜோகூர் பாரு, சிங்கப்பூர் போன்ற இடங்களில் வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அதேவேளையில், தமிழ்நாட்டிலும் இந்த ஆல்பம் வெளியீடு காண்கிறது.