செம்பூர்ணா, மார்ச் 3 – சபாவின் செம்பூர்ணா பகுதியில் உள்ள கம்போங் ஸ்ரீ ஜெயா சிமுனுல் என்ற இடத்தில் நிகழ்ந்த துப்பாக்கி சண்டைகளில் இதுவரை12 பேர் மரணமடைந்துள்ளனர் என்று போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஓமார் அறிவித்துள்ளார்.
அவர்களில் 6 போலீஸ்காரர்களும் அடங்குவர். முதலில் வந்த தகவல்கள் 5 போலீஸ்காரர்கள் மரணமடைந்ததாக தெரிவித்தன.
மரணமடைந்த எஞ்சிய அறுவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர்கள் ஊடுருவல்காரர்களாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது.
மற்ற போலீஸ்காரர்கள் அனைவரும் பத்திரமாக திரும்பி விட்டனர் என்பதனால், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் லகாட் டத்துவில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த இஸ்மாயில் ஓமார் தெரிவித்தார்.
மரணமடைந்த போலீஸ்காரர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த இஸ்மாயில் ஓமார், தற்போது போலீசின் குற்றச்செயல் துப்பறியும் பிரிவு அங்கு மரணமடைந்த மற்றவர்களின் அடையாளங்களைத் தெரிந்து கொள்ள விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட அந்த கிராமத்தில் சுமார் 300 வீடுகள் இருப்பதாகவும், ஒவ்வொரு வீடாக போலீசார் சோதனை செய்த பின்னரே மேற்கூறிய தகவல்கள் வெளியிடப்பட்டன என்றும் இஸ்மாயில் ஓமார் கூறியுள்ளார்.
போலிசார் யாரும் பிணையாகப் பிடிக்கப்படவில்லை என்றும் இஸ்மாயில் ஓமார் கூறினார். போலீஸ்காரர்களின் தலைகள் வெட்டப்பட்டுள்ளனவா என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், தான் முழுமையான அறிக்கைக்காக காத்திருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
அண்மையக் காலத்தின் மிகப் பெரிய பாதுகாப்பு நெருக்கடி
அண்மைய ஆண்டுகளில் இதுவரை காணாத அளவுக்கு மலேசியாவில் இந்த பாதுகாப்பு நெருக்கடி தற்போது ஏற்பட்டுள்ளது.
சபா மாநிலத்தில், செம்பூர்ணா என்னும் ஊர் தாண்டுவா என்ற கிராமத்திலிருந்து சுமார் 150 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
இந்த தாண்டுவா கிராமத்தில்தான் பிலிப்பைன்சிலிருந்து கடல் மார்க்கமாக படகுகளில் ஒரு குழுவினர் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி வந்து தரையிறங்கி பிலிப்பைன்சைச் சேர்ந்த 74 வயது சூலு சுல்தான் ஜமாலுல் கிராம் என்பவரின் ஆதரவாளர்கள் என்று கூறிக் கொண்டு அந்த பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அந்த பகுதி பூர்வீகமாக தங்களுக்கு சொந்தமானது என்றும் உரிமை கொண்டாடி வருகின்றனர்.
பழங்காலத்தில் பிலிப்பைன்சின் சில பகுதிகளையும், சபாவையும் உள்ளடக்கிய நாடாக சுல்தானை அரசராகக் கொண்ட சூலு என்ற இஸ்லாமிய நாடு இயங்கி வந்ததாகவும் அதனால் தாங்கள் ஆக்கிரமித்துள்ள பகுதிக்கு தற்போதைய சூலு சுல்தான்தான் உரிமையாளர் என்றும் ஆக்கிரமிப்பாளர்கள் கூறிவருகின்றனர்.
அந்த பகுதியிலுள்ள சுமார் 100 முதல் 300 பேரைக்கொண்ட ஆக்கிரமிப்பு குழுவினரை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர்.
அந்த பகுதியில் தற்போது குழப்பமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மற்றொரு புதிய ஆயுதக்கும்பல் ஊடுருவலா?
இதற்கிடையில் இதே பகுதியில் உள்ள குணாக் என்ற மற்றொரு ஊரில் புதியதொரு ஆயுதம் தாங்கிய கும்பல் ஊடுருவி உள்ளதாகவும் போலிசார் அவர்களைப் பின் தொடர்வதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
சபா மாநிலத்தில் சட்டபூர்வமாகவும், சட்டத்துக்கு புறம்பான முறையிலும் ஏராளமான பிலிப்பினோக்கள் இருப்பதால் நிலைமை எதிர்பார்ப்பதை விட மேலும் மோசமாகலாம் என்றும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.