கோத்தாகினபாலு – செம்பூர்ணா அருகே உள்ள தீவுப்பகுதியில் சீனாவைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள் ஆடைகளைக் களைந்து அநாகரிகச் செயலில் ஈடுபட்டதாக எழுந்த புகார் உண்மை தான் என காவல்துறை தெரிவித்துள்ளது.
அடைகளைக் களைந்த பின்னர் அப்பயணிகள் ஒன்றாக நின்று பல்வேறு கோணங்களில் புகைப்படங்களும் எடுத்துள்ளனர்.
இந்த அநாகரிகச் செயல் இரு வாரங்களுக்கு முன்போ அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு முன்போ நிகழ்ந்திருக்கலாம் என காவல்துறை கருதுவதாக செம்போர்னா காவல்துறை தலைமைக் கண்காணிப்பாளர் பீட்டர் உம்புவாஸ் கூறியுள்ளார்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய சீன சுற்றுப் பயணிகள் அனைவருமே நாடு திரும்பிவிட்டதால், அவர்களில் யாரையும் கண்டறிய முடியவில்லை என்றார் அவர்.
“ஆடைகளின்றி சுற்றுப்பயணிகள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வைத்து அனைத்துலக காவல்துறை (இண்டர்போல்) உதவியுடன் அவர்களை அடையாளம் காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் அப்பயணிகள் சபாவுக்கு சென்றார்களா என்பதை உறுதி செய்ய குடிநுழைவுத் துறையின் உதவியும் நாடப்படும்” என்றார் பீட்டர்.
முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட சில புகைப்படங்களைக் கண்டு செம்பூர்ணாவில் வசிக்கும் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்ததாகவும், அதன் பேரில் செவ்வாய்க்கிழமை விசாரணை தொடங்கியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.