கோலாலம்பூர்- மோசமான புகைமூட்டம் காரணமாக இன்று வியாழக்கிழமையும் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள நூற்றுக்கணக்கான பள்ளிகள் மூடப்படுகின்றன.
இதற்கான உத்தரவை கல்வி அமைச்சு புதன்கிழமை பிறப்பித்தது. இதையடுத்து மொத்தம் 4,778 பள்ளிகள் மூடப்படும்.
இவற்றில் பயிலும் 26 லட்சத்து 96 ஆயிரத்து 110 மாணவர்கள் இன்றும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. புகைமூட்டத்தால் பிள்ளைகளின் உடல்நிலை பாதிக்கப்படக் கூடாது எனும் கவலையுடன், தொடர் விடுமுறை காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதும் பெற்றோர்களுக்கு கூடுதல் கவலையைத் தந்துள்ளது.
நெகிரி செம்பிலான், சிலாங்கூர், புத்ராஜெயா, பினாங்கு, விலாயா, பேராக், கெடா, பெர்லிஸ் மற்றும் பகாங் மாநிலத்தில் உள்ள பென்தோங்கில் உள்ள பள்ளிகள் வியாழக்கிழமை மூடப்பட வேண்டும் என கல்வி அமைச்சு புதன்கிழமை அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“சுமார் 27 லட்சம் மாணவர்களுடன் சம்பந்தப்பட்ட உத்தரவு என்பதால், இயன்ற விரைவில் மாநில கல்வித்துறை இத்தகவலை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். புகைமூட்டத்தை அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், பொதுமக்களுக்கு உரிய தகவல்களையும் அவ்வப்போது தெரியப்படுத்தும். காற்று மாசுக் குறியீட்டு அளவு மோசமடையும்போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என கல்வி அமைச்சின் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.