Home Featured நாடு சங்கப் பதிவக வழக்கு – மஇகாவில் முடிவுக்கு வரும் பழனிவேல் சகாப்தம்!

சங்கப் பதிவக வழக்கு – மஇகாவில் முடிவுக்கு வரும் பழனிவேல் சகாப்தம்!

642
0
SHARE
Ad

Samy Vellu-Palanivelபுத்ரா ஜெயா – தங்கத் தாம்பாளத் தட்டில் தேசியத் தலைவர் பதவியை டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவுக்கு தாரை வார்த்து விட்டு, முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ச.சாமிவேலு கடந்த 2010இல் பதவி விலகினார்.

ஆனால், அடுத்த, ஐந்தே ஆண்டுகளில் அந்தப் பதவியையும் காப்பாற்ற முடியாமல், கட்சிக்கும் ஒரு முறையான தலைமைத்துவத்தை வழங்க முடியாமல் தோல்வியடைந்த பழனிவேலுவின் மஇகா சகாப்தம், நேற்று வழங்கப்பட்ட கூட்டரசு நீதிமன்றத்தின்  தீர்ப்புடன் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

கூட்டரசு நீதிமன்றத்தில் பழனிவேல் தரப்பினர் செய்திருந்த மேல்முறையீட்டுக்கான முன் அனுமதி விண்ணப்பத்திற்கு அனுமதி மறுத்த கூட்டரசு நீதிமன்றம், கட்சிக்கு மறு-தேர்தல் நடத்த வேண்டுமென்ற அவர்களின் வேண்டுகோள் காலங்கடந்த ஒன்று என்றும் தீர்ப்பளித்துள்ளது.

#TamilSchoolmychoice

சங்கப் பதிவகம் நடவடிக்கைகள் முறையானவை

MICமஇகா விவகாரத்தில் சங்கப் பதிவகம் மேற்கொண்ட முடிவுகள் அனைத்தும் முறையானவை, அவர்களின் அதிகாரத்துக்கு உட்பட்டவை என்பதை கூட்டரசு நீதிமன்றம் நிலைநிறுத்தியுள்ளது என அரசுத் தரப்பு மூத்த வழக்கறிஞரான அமர்ஜிட் சிங் நீதிமன்றத்திற்கு வெளியே பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தபோது நேற்று தெரிவித்துள்ளார்.

நேற்றைய தீர்ப்பின் மூலம் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம்தான் மஇகாவின் தேசியத்தலைவர் என்பதும் மறு-உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமர்ஜிட் குறிப்பிட்டார்.

நீதிபதி டான்ஸ்ரீ ரிச்சர்ட் மலாஞ்சும் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு பழனிவேல், டான்ஸ்ரீ பாலகிருஷ்ணன் உள்ளிட்ட மூன்று விண்ணப்பதாரர்களும் 10,000 ரிங்கிட் செலவுத்தொகையை பிரதிவாதிகளிடம் செலுத்த வேண்டுமெனவும் தீர்ப்பு வழங்கியுள்ளது.

டான்ஸ்ரீ சுரியாடி ஹாலிம், டத்தோ ரம்லி அலி ஆகிய இருவரும் இன்றைய அமர்வில் தீர்ப்பு வழங்கிய மற்ற இரு நீதிபதிகளாவர்.

சங்கப் பதிவகம், உள்துறை அமைச்சர், மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ எம்.சரவணன், செனட்டர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் ஆகியோர் இந்த வழக்கில் பிரதிவாதிகளாகப் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

வாதங்கள் என்ன?

மஇகாவின் அனைத்துத் தரப்புகளும் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்த வழக்கின் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மூன்று நீதிபதிகளும் ஒரு மனதாக தங்களின் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

Gopal Sri Ram Lawyer 2சரவணன் சார்பாக பிரதிநிதித்த மூத்த வழக்கறிஞரும், முன்னாள் மேல்முறையீட்டு நீதிபதியுமான டத்தோஸ்ரீ கோபால் ஸ்ரீராம் (படம்) இந்த வழக்கின் விவகாரம் முடிந்து போன ஒன்று, காரணம், சங்கப் பதிவகத்தின் உத்தரவுகள் கட்சியால் நிறைவேற்றப்பட்டு, அதன்மூலம் புதிய தலைவர் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாக வாதிட்டார்.

சங்கப் பதிவகத்தின் சார்பாகவும் அரசாங்கத் தரப்பிலும் பிரதிநிதித்த அமர்ஜிட் சிங், சங்கப் பதிவகம் விடுத்த உத்தரவுகள் மறு-தேர்தல்கள் எப்படி நடத்தப்பட வேண்டுமென்ற நடைமுறைகளையும், முறையாக சட்டரீதியாகப் பதிவு பெற்ற கிளைகள்தான் தேர்தல்களில் பங்கு கொள்வதை உறுதி செய்யும் வகையிலும் மட்டுமே இருந்தன என்றும் வாதிட்டார்.

மாறாக, சங்கப் பதிவகம் அதிகாரத்திற்கு மீறிய வகையிலோ, சட்டத்திற்குப் புறம்பாகவோ, நடந்து கொள்ளவில்லை என்றும் அவர் தனது வாதத்தில் குறிப்பிட்டார்.

இந்த வாதங்களையெல்லாம் கேட்ட பின்னர் நீதிபதிகள் உடனடியாகத் தங்களின் தீர்ப்பை வழங்கினர். இதுவே இறுதி முறையீடு என்பதால், பழனிவேல் தரப்பினரின் நீதிமன்ற மற்றும் சங்கப் பதிவகத்திற்கு எதிரானப் போராட்டங்கள் இனி ஒரு முடிவுக்கு வரும்.

சீராய்வு மனு வழக்கின் கடந்த காலங்கள்

KL High Court2013 நவம்பரில் நடைபெற்ற மஇகா தேர்தல்கள் மீதான புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து அந்த வழக்கை விசாரித்த சங்கப் பதிவகம், கடந்த டிசம்பர் 5ஆம் தேதியிட்ட அதிகாரபூர்வ கடிதத்தின் வழி, மஇகாவின் மூன்று உதவித் தலைவர்கள் மற்றும் 23 மத்திய செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் மீண்டும் அடுத்த 90 நாட்களுக்குள் நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

ஆனால், அந்த உத்தரவை நிறைவேற்றாமல் பழனிவேல் தலைமைத்துவமோ அனைத்துப் பதவிகளுக்கும் மறு-தேர்தல் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்தது. அதற்கும் சங்கப் பதிவகம் இணங்கி, அதற்கேற்ப உத்தரவுகளைப் பிறப்பித்தது.

ஆனால், பின்னர் தலைகீழ் மாற்றமாக, இந்த உத்தரவுகளுக்கு எதிராக பழனிவேலுவும் அவரது தரப்பினரும், சங்கப் பதிவகம் தனது அதிகாரங்களுக்கும், சங்க சட்டங்களுக்கும் மீறி செயல்பட்டதாக, நீதிமன்றத்தில் சீராய்வு மனு வழக்கொன்றைத் தொடுத்தனர்.

கடந்த ஜூன் 15ஆம் தேதி இந்த சங்கப் பதிவகத்திற்கு எதிரான இந்த சீராய்வு மனு வழக்கை விசாரித்த கோலாலம்பூர் உயர் நீதிமன்றம், பழனிவேல், சோதிநாதன், பாலகிருஷ்ணன்,ஏ.பிரகாஷ் ராவ் ஆகிய நால்வரும் சமர்ப்பித்த விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்தது.

Palanivel -Sothinathan-Balakrishanஅதன் பின்னர் இந்த நால்வரும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மேல்முறையீட்டையும் கடந்த ஜூலை 13ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளும் தள்ளுபடி செய்தனர்.

அதன் பின்னர் நீதிமன்றப் போராட்டத்தைத் தொடர்வதில் தனக்கு இனியும் நம்பிக்கையில்லை எனக் கூறி முன்னாள் தலைமைச் செயலாளர் ஏ.பிரகாஷ் ராவ் கூட்டரசு நீதிமன்றத்திற்கான மேல்முறையீட்டிலிருந்து விலகிக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து பழனிவேல், சோதிநாதன், பாலகிருஷ்ணன் ஆகிய மூவர் மட்டும் கூட்டரசு நீதிமன்றத்திற்கான மேல்முறையீட்டு அனுமதிக்கு விண்ணப்பிக்க அந்த விசாரணைதான் நேற்று நடைபெற்றது.

-இரா.முத்தரசன்