கோலாலம்பூர் – ஸ்பாட் (SPAD – Land Public Transport Commission) என்ற தரைப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையத்தை எதிர்த்து ஆயிரக்கணக்கான வாடகைக் கார் ஓட்டுநர்கள் எதிர்வரும் நவம்பர் 18ஆம் தேதி கோலாலம்பூரில் பேரணி நடத்த உள்ளனர்.
அன்றைய தினம் காலை 10 மணியளவில் மாநகரின் மூன்று பகுதிகளில் ஒன்று கூட இருக்கும் ஓட்டுநர்கள், பின்னர் குறிப்பிட்ட இடத்தை நோக்கி பேரணியாகச் செல்வர். அந்த இடம் எதுவென்று இதுவரை அறிவிக்கப்படவில்லை.
“நாங்கள் அரசாங்கத்துக்கு எதிராகச் செல்ல விரும்பவில்லை. அதேசமயம் அரசின் கவனத்தை இப்பேரணி வழி ஈர்க்க உள்ளோம்” என மலேசிய வாடகைக்கார் ஓட்டுநர்கள் உருமாற்றுச் சங்கத்தின் துணைத் தலைவர் கமாருடின் முகமட் ஹுசேன் தெரிவித்தார்.
பாடாங் மெர்போக், கே.எல்.மசூதி மற்றும் கிராஃப்ட் வளாகம் (ஜாலான் கோன்லே அருகே) ஆகிய பகுதிகளில் ஓட்டுநர்கள் நவம்பர் 18ஆம் தேதி கூடுவர் என்று குறிப்பிட்ட அவர், பின்னர் அனைவரும் வேறு ஒரு ரகசிய இடத்தில் ஒருங்கிணைவர் என்றார்.
“அந்த ரகசிய இடம் எது என அன்றைய தினம் அறிவிக்கப்படும். மொத்தம் 6 ஆயிரம் ஓட்டுநர்கள் இந்த எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்பர் என எதிர்பார்க்கிறோம். இதன் வழி ஸ்பாட் ஆணையத் தலைவர் டான்ஸ்ரீ சையட் ஹமிட் அல்பார் பதவி விலக வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.”
“ஸ்பாட் ஆணையம் கலைக்கப்பட வேண்டுமென நாங்கள் விரும்பவில்லை. ஆனால் அதன் தலைவர் சையட் ஹமிட் மீது வைத்திருந்த நம்பிக்கை வீணாகிவிட்டது” என்றார் கமாருடின்.
பேரணிக்கான அனுமதி பெறப்பட்டுவிட்டதா? என்ற கேள்விக்கு, இதுவரை அனுமதி பெறப்படவில்லை என்றும், அதைப் பெறுவதில் சிக்கல் ஏதும் இருக்காது என தாம் கருதுவதாகவும் அவர் கூறினார்.