Home Featured நாடு “நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்போரின் பட்டியலைத் தருக”: பண்டிகர்

“நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்போரின் பட்டியலைத் தருக”: பண்டிகர்

714
0
SHARE
Ad

pandikaraminகோலாலம்பூர்- பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்போரின் பட்டியலைத் தருமாறு எதிர்க்கட்சிகளிடம் நாடாளுமன்ற சபாநாயகர் டான்ஸ்ரீ பண்டிகார் அமின் மூலியா அறிவுறுத்தி உள்ளார்.

எதிர்க்கட்சிகளில் 89 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பது தமக்குத் தெரியும் என்றும், அந்த எண்ணிக்கையில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் கூறினார்.
பாஸ் மற்றும் பார்ட்டி அமானா நெகாரா பிளவு காரணமாக எதிர்க்கட்சிகளால் தாம் கோரும் பட்டியலைத் தர இயலாது என்பதைச் சுட்டிக்காட்டும் விதமாகவே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“90 அல்லது நூறு எம்.பி.,க்களின் பெயர்கள் கொண்ட பட்டியலை அவர்கள் என்னிடம் கொடுத்தால், தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தும்படி அரசாங்கத்துக்கு என்னால் அழுத்தம் கொடுக்க இயலும்” என நாடாளுமன்ற வளாகத்தில் புதன்கிழமையன்று செய்தியாளர்களிடம் பண்டிகர் கூறினார்.

#TamilSchoolmychoice

பிரதமரைப் பதவியிலிருந்து வெளியேற்ற நம்பிக்கையில்லா தீர்மானம் மட்டுமே ஒரே வழியல்ல என்று குறிப்பிட்ட அவர், நிதிநிலை அறிக்கை மீதான வாக்கெடுப்பில் அரசுத் தரப்பு தோல்வி கண்டாலும், அது நம்பிக்கையில்லா தீர்மானமாகவே கருதப்படும் என்றார்.

எதிர்க்கட்சிகள் சார்பில், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை, தாமே தாக்கல் செய்யப்போவதாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வான் அசிசா திங்கட்கிழமை அறிவித்திருந்தார்.

எனினும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு 14 நாட்கள் முன்பே இத்தகைய தீர்மானங்களுக்கான முன்னறிவிப்பு மனு அளிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட பண்டிகர், இனி அத்தகையதொரு தீர்மானத்தை அடுத்தாண்டு மார்ச் மாத நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தான் தாக்கல் செய்ய முடியும் என்றார்.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு முன்பாக ஆதரிப்போரின் பட்டியலை அவைத் தலைவர் கேட்பது என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இதுவரை இல்லாத நடைமுறையாகும். இதன் மூலம், தேசிய முன்னணியிலிருந்து பிரதமருக்கு எதிராக வாக்களிக்கப் போகின்றவர்கள் யார் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள பிரதமர் தரப்பில் வகுக்கப்பட்டுள்ள வியூகம் இது எனக் கருதப்படுகின்றது.