சென்னை – ‘மழைவிட்டாலும் தூறல் விட வில்லை’ என்ற கதையாக, நடிகர் சங்கத் தேர்தல் முடிவிற்கு வந்தாலும், நடிகர் சங்க கட்டிடம் தொடர்பாக எஸ்பிஐ சினிமா நிறுவனத்துடனான ஒப்பந்த விவாரம் இன்னும் முடிவிற்கு வராமலே இருக்கிறது.
“நான் தூய்மையானவன். ஊழல் குற்றச்சாட்டுகளுடன் வெளியேற விரும்பவில்லை” என்று பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் கண்ணீர் சிந்திய சரத்குமார், குறிப்பிட்ட அந்த ஒப்பந்தத்தை கடந்த மாதமே ரத்து செய்துவிட்டதாகக் கூறி அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டார். இந்நிலையில், அந்த ஒப்பந்தம் ரத்தாகவில்லை என்றும், அது எஸ்பிஐ சினிமா வசமே உள்ளதாக பதிவாளர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக பிரபல ஊடகம் ஒன்றில் வெளியாகி உள்ள செய்தியில், “நவம்பர் 26, 2010-ல் நடிகர் சங்க அறக்கட்டளையும், எஸ்பிஐ சினிமா நிறுவனமும் ஒப்பந்தம் செய்து, அதை முறையாகப் பதிவு செய்தனர். இப்போது தி.நகர் சார் பதிவாளர் அலுவலகத்தில் இந்தப் பத்திரம் உள்ளது.”
“இதனை ரத்து செய்ய வேண்டுமானாலும், அதற்கான ரத்து ஆவணம் தயார் செய்து அதனை பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யவில்லை. எனவே இந்த நிமிடம் வரை நடிகர் சங்க நிலம் சத்யம் சினிமா வசம்தான் உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சரத்குமார் ரத்து ஆவணங்களை வெளியிட்ட சமயத்தில் ராதிகா, டுவிட்டர் வாயிலாக, “தவறான குற்றச்சாட்டுகளுக்காக அவமானத்தால் தலைகுனியுங்கள் நண்பர்களே” என்று குறிப்பிட்டு சர்ச்சையை கிளப்பினார். தற்போது ஒப்பந்தம் ரத்தாகவில்லை என தெரியவருகிறது. இதற்கு அவர் என்ன விளக்கம் கொடுக்க போகிறார் என்பது தெரியவில்லை.