Home நாடு “குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் மஇகாவிலிருந்து ராஜினாமா செய்கின்றேன்” பழனிவேலுவுக்கு, வேள்பாரி சவால்!

“குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் மஇகாவிலிருந்து ராஜினாமா செய்கின்றேன்” பழனிவேலுவுக்கு, வேள்பாரி சவால்!

558
0
SHARE
Ad

கோலாலம்பூர், மார்ச் 21 – “என் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை அடுத்த 7 நாட்களுக்குள் பழனிவேல் நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபித்தால் நான் மஇகாவிலிருந்தே ராஜினாமா செய்கின்றேன். இல்லாவிட்டால் பழனிவேல், கட்சியிலிருந்து ராஜினாமா செய்யவேண்டும்” என கெப்போங் தொகுதித் தலைவரும் மஇகாவின் முன்னாள் வியூக இயக்குநருமான டத்தோஸ்ரீ சா.வேள்பாரி, பழனிவேலுவுக்கு சவால் விடுத்துள்ளார்.

Vell Paariதன்னை கட்சியிலிருந்து இடைக்காலத்திற்கு நீக்கும் தேசியத் தலைவர் பழனிவேலுவின் கடிதத்தையும் தான் பெற்றுள்ளதாகவும் வேள்பாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

“தேசியத் தலைவருக்கு ஒருவரை கட்சியிலிருந்து நீக்கும் அதிகாரமோ, கட்சியில் எந்த மாற்றங்களை ஏற்படுத்தவோ அதிகாரம் இல்லை என சங்கப் பதிவகம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. இடைக்கால மத்திய செயலவையும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. 2009இன் மத்திய செயலவைதான் அதிகாரபூர்வமானது என சங்கப் பதிவகமும் உறுதிப்படுத்தியுள்ளது” என்றும் வேள்பாரி சுட்டிக் காட்டினார்.

#TamilSchoolmychoice

“அதேவேளையில், எனக்கு வழங்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் யாவும் பொய்யானவை, தகாத தீய நோக்கத்தைக் கொண்டவை என்றும் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். இந்தக் கடிதம் எனது மதிப்பையும், தோற்றத்தையும் சீர்குலைப்பது போல் என்பதோடு, குற்றவியல் (கிரிமினல்) ரீதியாகவும் உள்ளது” என்றும் வேள்பாரி கூறினார்.

பழனிவேல் தன்னை கட்சியிலிருந்து நீக்கும் கடிதத்தையும், அதன் உள்ளடக்கங்களையும், பழனிவேலுவின் எந்தவித நடவடிக்கையையும் அனாவசியமானது, தேவையற்றது என தான் கருதுவதாகவும், அவற்றைப் பொருட்படுத்தப் போவதில்லை என்றும் வேள்பாரி மேலும் தெரிவித்துள்ளார்.

“என்மீது பழனிவேல் சுமத்தியுள்ள எல்லா குற்றச்சாட்டுகளையும் அடுத்த 7 நாட்களுக்குள் அவர் நிரூபிக்க வேண்டுமென நான் சவால் விடுகின்றேன். அப்படி அவர் நிரூபித்து விட்டால் நான் மஇகாவிலிருந்தே ராஜினாமா செய்கின்றேன். அப்படி நிரூபிக்க முடியாவிட்டால் அவர் மஇகாவிலிருந்து ராஜினாமா செய்யவேண்டும். அதோடு, மஇகா சட்டவிதி 91இன்படி கட்சி விவகாரத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றதால் அவர் தனது மஇகா உறுப்பியத்தை இயல்பாகவே இழந்து விட்டார். இந்த விவகாரத்தையும், என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளையும், எனது உரிமைகளை பாதித்திருக்கும் பழனிவேலுவின் நடவடிக்கையையும், எனது தோற்றத்தைக் களங்கப்படுத்தியிருக்கும் நடவடிக்கை குறித்தும் எனது வழக்கறிஞர்களிடம் விவகாரத்தை ஒப்படைத்திருக்கின்றேன்” என்றும் வேள்பாரி தெரிவித்துள்ளார்.