Home கலை உலகம் “நூறு விதமான தொனியில் பேசிய சிம்மம் சிவாஜி கணேசன்” – கட்டபொம்மன் மறு திரையீட்டில் வைரமுத்து!

“நூறு விதமான தொனியில் பேசிய சிம்மம் சிவாஜி கணேசன்” – கட்டபொம்மன் மறு திரையீட்டில் வைரமுத்து!

801
0
SHARE
Ad

சென்னை, மார்ச் 21 – சிவாஜி கணேசன் நடித்து, பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் 1959-ம் வருடம் வெளிவந்த வரலாற்று சிறப்பு மிகுந்த படம் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்.’ 56 வருடங்களுக்குப்பின் இந்த படம் ‘சினிமாஸ்கோப்’பில் புதிய தொழில்நுட்பங்களுடன் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது.

இதன் முன்னோட்டத்தின் (டிரெய்லர்)  வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில்  நடந்தது.

Vairamuthu Linga Audio Launch 400 x 600இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய கவிஞர் வைரமுத்து சிவாஜியைப் பற்றியும் வரலாற்று சிறப்பு மிக்க கட்டபொம்மன் படத்தைப் பற்றியும் புகழ்ந்துரைத்தார்:-

#TamilSchoolmychoice

‘‘வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற வரலாற்று கலைப்படத்தின் பெருமையை புரிந்து கொள்ள வேண்டுமென்றால், நிகழ்கால திரையுலகம் குறித்த தகவல் அறிவு வாய்த்திருக்க வேண்டும். இன்று வெள்ளிக்கிழமை வெளியாகும் ஒரு திரைப்படம் மூன்றாம் காட்சியில் நிலைத்திருந்தால், ஆஹா என்கிறார்கள். சனி, ஞாயிறு நீடித்தால், அபாரம் என்கிறார்கள். திங்கட்கிழமையும் மாற்றப்படாமல் இருந்தால், வெற்றிப்படம் என்கிறார்கள்.

இப்படிப்பட்ட ஒரு திரைச்சூழலில் ஒரு படம், 56 ஆண்டுகளுக்கு பிறகு புதிய தொழில்நுட்பத்தோடு தமிழர் வீட்டு கதவுகளை மீண்டும் தட்டுகிறதென்றால், வீரபாண்டிய கட்டபொம்மனின் புகழையும், சிவாஜி கணேசனின் பெருமையையும் உணர்ந்து கொள்ளலாம்.

தமிழ் திரை வரலாற்றின் நெடுங்கணக்கில் எத்தனையோ கதாநாயகர்கள் வந்து போயிருக்கிறார்கள். ஆனால், ஆண்மையை ஆர்ப்பரிக்கும் தமிழ்க் குரல் சிவாஜி கணேசனைப்போல் வேறு எவருக்கும் வாய்த்ததில்லை. அவரை, ‘சிம்மக்குரலோன்’ என்று அழைத்தார்கள். சிங்கத்தின் கர்ஜனைக்கு கூட ஒரே தொனிதான் உண்டு. ஆனால், நூறு குரலில் பேசிய சிம்மம், சிவாஜி கணேசன்.

மறைந்த பிறகும் ஒளியாக, ஒலியாக, உருவமாக, அசைவாக வாழ்ந்து கொண்டே இருப்பதால் நடிகர்கள் சாகா வரம் பெற்றவர்கள். பொதுவாக நடிகர்கள் ஒப்பனையை அணிந்து கொண்டு நடிப்பார்கள். ஆனால், சிவாஜியோ ஒப்பனையை அணிந்து கொண்ட பிறகு பாத்திரத்துக்குள் புகுந்து கொண்டு நடித்தவர்.

Veerapandiya_Kattabommanஇந்த வீரபாண்டிய கட்டபொம்மன் விழாவில் இளைய நடிகர்களுக்கும், இந்தியாவுக்கும் ஒரு சேதி இருக்கிறது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திரையிட்டுப் பார்ப்பதற்கு இளைய நடிகர்களுக்கு எத்தனை படங்கள் தேறும்? என்ற கேள்வியை வீரபாண்டிய கட்டபொம்மன் எழுப்புகிறது.

அன்னிய முதலீடுகள் எந்த நாளும் இந்தியாவுக்கு ஆபத்து என்பதைத்தான் கட்டபொம்மன் வரலாறு நமக்கு போதிக்கிறது. இன்னொரு சுதந்திர போருக்கு இந்தியா தள்ளப்பட்டு விடக்கூடாது. இதைத்தான் வீரபாண்டிய கட்டபொம்மன் நிகழ்காலத்தின் கன்னத்தில் அறைந்து சொல்கிறான்.’’

இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.

இந்த விழாவில் நடிகர்கள் சிவகுமார், ராம்குமார், பிரபு, விக்ரம் பிரபு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் அருள்பதி, பட அதிபர் சித்ராலட்சுமணன், ராஜ் டி.வி. ராஜேந்திரன், நடிகர் ஜெமினி கணேசன் மகள் டாக்டர் கமலா செல்வராஜ் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.