Home நாடு மஇகா: வழக்கே இன்னும் தொடங்கவில்லை! அதனால், யாருக்கும் இதுவரை வெற்றியில்லை!

மஇகா: வழக்கே இன்னும் தொடங்கவில்லை! அதனால், யாருக்கும் இதுவரை வெற்றியில்லை!

512
0
SHARE
Ad

கோலாலம்பூர், மார்ச் 21 – நேற்று நடைபெற்று முடிந்திருக்கும் மஇகா – சங்கப் பதிவகம் இடையிலான வழக்கின் முதல் கட்ட தீர்ப்பு குறித்து பல்வேறு வியாக்கியானங்கள், குழப்பங்கள் நிலவுவதால், இரு தரப்புக்கும் பொதுவான சட்ட ரீதியான விளக்கங்களை, நமக்குத் தெரிந்தவரையிலும், வழக்கறிஞர்களை அணுகி தெரிந்து கொண்டதிலிருந்தும் இங்கே பார்ப்போம்.

mic-palanivel-300x199வழக்கு விசாரணையில் இருக்கும்போதே, ஒரு தரப்பு வழக்கிலேயே வெற்றி பெற்றுவிட்டது போல் உற்சாக வெள்ளம் ஒரு பக்கம் கரைபுரண்டோடிக் கொண்டிருக்கின்றது. இன்னொரு பக்கமோ, வழக்கு முடிவடைந்து தோல்வியடைந்து விட்டதுபோல் ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பைப் பொறுத்தவரை பழனிவேல் தரப்புக்கு இது முதல்கட்ட வெற்றி என்பது உண்மைதான்.

#TamilSchoolmychoice

காரணம், சங்கப் பதிவகத்தின் அரசு தரப்பு வழக்கறிஞர் எழுப்பியிருந்த பூர்வாங்க ஆட்சேபணைகளை நீதிபதி ஏற்றுக் கொண்டிருந்தால், இந்த வழக்கை நேற்றே தள்ளுபடி செய்திருப்பார்.

வழக்கும் ஒரு முடிவுக்கு வந்திருக்கும்!

அந்த வகையில், அரசு வழக்கறிஞரின் முதல் கட்ட பூர்வாங்க ஆட்சேபணைகளைத் தாண்டி, தங்கள் முன் இருந்த முதல் தடைக்கல்லை உடைத்து, அடுத்த கட்டத்திற்கு முன்னேறியிருக்கும் வகையில் பழனிவேல் தரப்பினருக்கு இது வெற்றிதான்.

இனி அடுத்த கட்ட சட்டப் போராட்டம், ஏப்ரல் 2ஆம் தேதி அரங்கேறவிருக்கின்றது.

ஏப்ரல் 2ஆம் தேதி என்ன நடக்கும்?

MIC-logoஅன்றைய விசாரணையில், வழக்கு முடிவடையும்வரை, சங்கப் பதிவகத்தின் முடிவுகளை செயல்படுத்தக் கூடாது என பழனிவேல் தரப்பினர் விடுத்திருக்கும் விண்ணப்பம் மீதான வாதப் பிரதிவாதங்கள் நடைபெறும்.

அந்த விசாரணையிலும் பழனிவேல் தரப்புக்கே சாதகமான முடிவு அமையும் என்பது சட்ட வல்லுநர்களின் கருத்து.

காரணம், வழக்கின் சாராம்சமே சங்கப் பதிவகத்தின் முடிவுகள் குறித்ததுதான். எனவே, வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது, இன்னொரு பக்கம் சங்கப் பதிவகத்தின் முடிவுகள் அமுல்படுத்தப் படுமானால், அதனால் பழனிவேல் தரப்பினருக்கு பாதிப்பு வரலாம் என்பதால், வழக்கு முடியும்வரை சங்கப் பதிவகத்தின் முடிவுகளை அமுல்படுத்துவதில் இருந்து நிறுத்தி வைக்கும் முடிவை நீதிமன்றம் எடுக்கும்.

இதுவும் நீதிமன்ற நடைமுறையில் வழக்கமான ஒன்றுதான். இதுவும் ஓர் இடைக்கால முடிவுதான்!

ஆனால், அதற்குப் பிறகுதான் உண்மையிலேயே வழக்கு தொடங்கப் போகின்றது.

அதற்குப் பின்னர் நடைபெறும் வழக்கில்தான், இந்த வழக்கின் உள்ளடக்கங்கள் ஆய்வுக்கும் விசாரணைக்கும் எடுத்துக் கொள்ளப்படும்.

சங்கப் பதிவகம் செய்துள்ள முடிவுகள் சரிதானா? பதிவகம் சட்டத்திற்கு உட்பட்டு முடிவுகளை எடுத்ததா? சங்கங்களின் சட்டப்படி கட்சியின் உள்விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்ற விதிமுறை இந்த வழக்கால் மீறப்படுகின்றதா? என்பது போன்ற பல கேள்விகளுக்கு விசாரணையின் மூலம் விடை கண்டுபிடித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும்.

சரித்திரப் பிரசித்தி பெற்ற வழக்குKL High Court

இந்த வழக்கில், நீதிமன்றம் பல முக்கியமான, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளைச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காரணம், அரசியல் கட்சியின் உள்விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடக் கூடாது எனத் திருத்தப்பட்ட 1988ஆம் ஆண்டின் சங்கங்களின் சட்டத்தின் நிலைப்பாட்டை சட்ட ரீதியாக நீதிமன்றம் அணுகப்போகும் மிக முக்கியமான வழக்காக இந்த வழக்கு சட்டத்துறை வட்டாரங்களில் பார்க்கப்படுகின்றது.

வழக்கின் இறுதி முடிவில் நீதிமன்றம் கீழ்க்காணும் முடிவுகளில் ஒன்றை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது:-

  1. சங்கங்களின் சட்டப்படி, இந்த வழக்கு ஓர் அரசியல் கட்சியின் உள்விவகாரம் என்பதால் இது குறித்து விசாரிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. அதனால் வழக்கு தள்ளுபடி செய்யப்படலாம்.
  2. சங்கப் பதிவகத்தின் முடிவுகள் அவர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டவைதான். அதனால், அவர்களின் முடிவு சரியானதுதான்.
  3. மேற்கண்ட இரண்டு முடிவுகளில் ஏதாவது ஒன்றை நீதிமன்றம் எடுத்தால், அதன்படி கட்சியில் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் – 2009 மத்திய செயலவைதான் அதிகாரபூர்வ மத்திய செயலவையாக கட்சியின் தேர்தலை ஏற்று நடத்தும்.
  4. சங்கங்களின் பதிவகத்திற்கு ஒரு கட்சியின் தேர்தலில் தலையிடுவதற்கோ, அந்த தேர்தலை செல்லாது என அறிவிப்பதற்கோ உரிமையில்லை. எனவே, சங்கங்களின் உத்தரவுக் கடிதங்கள் செல்லாது. இத்தகைய முடிவு நீதிமன்றத்தால் எடுக்கப்பட்டால், 2013ஆம் ஆண்டின் கட்சித் தேர்தல் செல்லுபடியாகும், 2013 மத்திய செயலவையே அதிகாரபூர்வமானதாக அறிவிக்கப்படும். அத்தகைய சூழ்நிலையில் 2013இல் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயலவையின் பதவிக் காலம் 2016இல் தான் முடிவுக்கு வரும். ஆனால், பழனிவேல் தலைமையிலான 2013 மத்திய செயலவை தேர்தலை இந்த ஆண்டே நடத்தலாம். அல்லது அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கலாம். வழக்கின் முடிவு எதுவாக இருந்தாலும் இந்த ஆண்டே கட்சியின் தேர்தல் நடைபெறும் என பழனிவேல் அறிவித்திருக்கின்றார் என்பதை இங்கே நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்.

வழக்கு முழுவதுமாக நடைபெற்று முடிவடையும் போது மேற்காணும் அடிப்படைகளிலோ, அல்லது இதனையொட்டிய வழிகளிலோ நீதிமன்றத்தின் தீர்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முடிவு எப்படியிருந்தாலும், தோல்வியுறும் தரப்பு மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பிருப்பதால், வழக்கின் மூலம் கட்சியில் ஏற்பட்டிருக்கும் போராட்டம் இப்போதைக்கு முடிவடையும் வாய்ப்பு இல்லை.

இருப்பினும், ஏப்ரல், மே மாதங்களில் கட்சியில் தேர்தல் நடைபெற வேண்டும் என்ற காரணத்தைக் காட்டி, நீதிமன்ற விசாரணை துரிதப்படுத்தப்படுவதற்கான சாத்தியங்கள் நிலவுகின்றன.

இதற்கிடையில் ஒன்று, சம்பந்தப்பட்ட மஇகா தலைவர்கள் ஒன்றுகூடிப் பேசி, சமாதானப் பேச்சுவார்த்தைகளின் மூலம் ஓர் இணக்கமான முடிவுக்கு வரவேண்டும்.

அல்லது, பிரதமர் தலையிட்டு மீண்டும் ஒரு முறை இரண்டு தரப்புக்கும் இடையில் ஒரு சமாதான உடன்படிக்கையைக் கொண்டுவர வேண்டும்.

இல்லாவிட்டால், இந்த வழக்கும், மஇகாவில் ஏற்பட்டுள்ள தலைமைத்துவ போராட்டமும் ஒரு முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் தற்போது ஏதும் இல்லை.

-இரா.முத்தரசன்