Home வணிகம்/தொழில் நுட்பம் லுப்தான்சாவின் விமான சேவை மீண்டும் தொடங்கியது!

லுப்தான்சாவின் விமான சேவை மீண்டும் தொடங்கியது!

616
0
SHARE
Ad

Lufthansa-பிராங்பர்ட், மார்ச் 23 – ஜெர்மன்  விமான நிறுவனம் லுப்தான்சாவின் விமான சேவை மீண்டும் தொடங்கி உள்ளதாக அந்நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது. விமானிகளின் நான்கு நாட்கள் போராட்டம் ஏறக்குறைய முடிவிற்கு வந்துள்ளதால், உள்நாட்டு விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கி உள்ளதாக தெரிவித்துள்ளது.

எனினும், நெடுந்தொலைவு விமான சேவை இன்னும் இயக்கப்படவில்லை என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜெர்மனியின் முக்கிய விமான நிறுவனமான லுப்தான்சாவின் விமானிகள், ஓய்வூதிய பயன்கள் தொடர்பாக விமான நிறுவனத்துடன் கடந்த சில மாதங்களாக தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பேச்சுவார்த்தையில் சுமூகத் தீர்வு எட்டாததால், அவ்வபோது தொடர் வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 18-ம் தேதி அறிவித்த வேலை நிறுத்தம் நேற்று வரை நீடித்துள்ளது. இந்நிலையில், லுப்தான்சா நிர்வாகம் தொழிற்சங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தற்காலிக தீர்வு எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

எனினும், தொழிற்சங்கங்த்துடனான பேச்சுவார்த்த இழுபறியில் இருப்பதாகவே லுப்தான்சா நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து லுப்தான்சாவின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில்,

“உள்ளூர் மற்றும் நடுத்தர விமானங்கள் வழக்கம் போல் செயல்படத் தொடங்கினாலும், நெடுந்தூர விமானங்கள் இன்னும் இயக்கப்படவில்லை. நிர்வாகமும், தொழிற்சங்கமும் விமானிகளின் போராட்டம் காரணமாக கடுமையான மனக்கசப்பில் உள்ளன”.

“இவை விரைந்து சரி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவுதான். எனினும், ஈஸ்டர் திருநாளுக்கு முன்பாகவே அனைத்து பிரச்சனைகளுக்கும் சுமூகத் தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளது”  என்று கூறியுள்ளார்.

கடந்த நான்கு நாட்களாக தடைபட்ட விமான போக்குவரத்து காரணமாக சுமார் 220,000 பயணிகள் பாதிப்படைந்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை லுப்தான்சா விமானிகள் சுமார் 12-வது முறை இதுபோன்ற போராட்டங்களை நிகழ்த்தி உள்ளனர்.

விமானிகளின் இத்தகைய போராட்டங்களுக்கு முக்கிய காரணம், லுப்தான்சா நிறுவனம் கொண்டு வந்த ஓய்வு பயன் திட்டமாகும். விமானிகள் 55 வயதில் ஓய்வு பெற்றாலும், சட்டப்பூர்வ ஓய்வு வயதான 65-ஐ அடையும் வரையில் அவர்களுக்கு ஓய்வூதியத் தொகை 60 சதவீதமே தரப்படும் என்பதாகும்.

விமானங்கள் தொடர்ந்து தடைபட்டு வருவதும், பயணிகள் மத்தியில் விமான நிறுவனத்திற்கு தொடர்ந்து அவ பெயர் ஏற்பட்டு வருவதையும் நிறுவனத்தின் பங்குதாரர்கள் விரும்பாததால், விமானிகளுடனான பிரச்சனை விரைந்து சரி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.