பெங்களூர், மார்ச் 24 – முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், சொத்துப்பட்டியலை தணிக்கக் குழு ஆய்வு செய்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் 41 நாட்கள் நடைபெற்று கடந்த 17-ஆம் தேதி முடிவடைந்தது.
தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கை நீதிபதி குமாரசாமி ஒத்திவைத்தார். இந்நிலையில் வழக்கின் ஆவணங்களை சரியாக மதிப்பிட தணிக்கையாளர்கள் (ஆடிட்டர்கள்) குழுவின் உதவியை நீதிபதி நாடியுள்ளார்.
இதனையடுத்து ஜெயலலிதா உள்ளிட்டோரின் சொத்துகளை தணிக்கை குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த குழுவின் அறிக்கைக்காக நீதிபதி காத்திருப்பதாகவும், இந்த வழக்கின் தீர்ப்புக்கான முகவுரையை தயாரிக்கும் பணியில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தீர்ப்பை எழுதும் பணியில் நீதிபதிக்கு உதவியாக 5 பேர் கொண்ட குழு செயல்பட்டு வருகின்றது. நடப்பு வார இறுதியில் மேல் முறையீடு தீர்ப்புக்கான முகவுரை தயாரிக்கும் பணிகள் முடிவடையும் என்று கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து தணிக்கை குழுவின் அறிக்கை கிடைத்ததும் தீர்ப்பை நீதிபதி எழுதவுள்ளார். மார்ச் இறுதியிலோ ஏப்ரல் முதல் வாரத்திலோ சொத்து குவிப்பு வழக்கில் மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வெளியாகும் என எதிர்பர்க்கப்படுகிறது.