Home நாடு சங்கப் பதிவக வழக்கில் மத்திய செயலவை 3ஆம் தரப்பாகத் தலையிடும் – 5 பேர் மீதான...

சங்கப் பதிவக வழக்கில் மத்திய செயலவை 3ஆம் தரப்பாகத் தலையிடும் – 5 பேர் மீதான இடைநீக்கம் செல்லாது

501
0
SHARE
Ad

கோலாலம்பூர், மார்ச் 28 – இன்று பிற்பகலில் மஇகா தலைமையகக் கட்டிடத்தில் நடைபெற்ற மஇகாவின் 2009 மத்திய செயலவைக் கூட்டம் இரண்டு முக்கிய முடிவுகளை எடுத்ததாக அந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் அறிவித்தார்.

Dr S. Subramaniamகூட்டம் நிறைவு பெற்ற பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய சுகாதார அமைச்சருமான சுப்ரமணியம், கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவும் மற்ற தலைவர்களும் இணைந்து சங்கப் பதிவகத்திற்கு எதிராகத் தொடுத்துள்ள வழக்கில் மூன்றாம் தரப்பாகத் தலையிட்டு தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க மத்திய செயலவை இன்று முடிவெடுத்ததாகவும் தெரிவித்தார்.

“சங்கப் பதிவகம் மீதான வழக்கு குறித்து பழனிவேலுவும் மற்றவர்களும் இதுவரையில் மத்திய செயலவையின் கவனத்திற்குக் கொண்டு வரவில்லை. எந்த மஇகா அமைப்பிற்கும் தெரிவிக்காமல் இரகசியமாகவே இந்த வழக்கைத் தொடுத்துள்ளனர். பத்திரிக்கைகளில் பார்த்தபின்னர்தான் நாங்களே தெரிந்து கொண்டோம். எனவே, இந்த வழக்கில் மூன்றாம் தரப்பாகத் தலையிட்டு மத்திய செயலவையின் ஒப்புதலின்றி இந்த வழக்கு நடைபெறுகின்றது என்பதையும், எங்களின் மற்ற தரப்பு வாதங்களையும் நீதிமன்றத்தின் முன்வைப்போம்” என்றும் சுப்ரமணியம் கூறினார்.

#TamilSchoolmychoice

மஇகா-சங்கப் பதிவகம் இடையிலான வழக்கில் ஏற்கனவே, முன்னாள் இளைஞர் பகுதித் தலைவர் செனட்டர் டத்தோ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் மூன்றாம் தரப்பாகத் தலையிடும் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கின்றார்.

மத்திய செயலவை மூன்றாம் தரப்பாக வழக்கில் தலையிடும் விண்ணப்பத்தை வழக்கறிஞர்கள் எதிர்வரும் ஏப்ரல் 2ஆம் தேதிக்கு முன்பாக நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் வழக்கு எதிர்வரும் ஏப்ரல் 2ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

5 பேர் இடை நீக்கம் செல்லாது

MIC-logoஇன்றைய மத்திய செயலவை எடுத்திருக்கும் மற்றொரு முக்கிய முடிவு, பழனிவேல் மேற்கொண்டுள்ள 5 பேர் மீதான இடைநீக்கம் செல்லாது என்பதாகும்.

“இன்றைய நிலையில் 2009ஆம் ஆண்டின் மத்திய செயலவைதான் சங்கப் பதிவகத்தால் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மத்திய செயலவையாகும். பழனிவேலுவும் மற்றவர்களும் தொடுத்துள்ள வழக்கிலும் நீதிமன்றம் இதுவரை எந்தவித இறுதி முடிவையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கட்சியிலிருந்து யாரையும் நீக்கும் அதிகாரம் தேசியத் தலைவருக்கு இல்லை. எனவே, 5 பேரை இடைநீக்கம் செய்வதாக பழனிவேல் செய்துள்ள முடிவு சட்டப்படி செல்லாது. எனவே, இடைநீக்கம் செய்வதாக அனுப்பப்பட்டுள்ள அந்தக் கடிதங்கள் செல்லாது, அவற்றுக்கு சட்டரீதியாக மதிப்பில்லை” என்றும் சுப்ரமணியம் குறிப்பிட்டார்.

பழனிவேலுவால் இடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் முன்னாள் இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ டி.மோகனும், கெப்போங் தொகுதி மஇகா தலைவர் டத்தோஸ்ரீ சா.வேள்பாரியும் அடங்குவர்.

“இடைநீக்கக் கடிதத்தைப் பெற்றவர்களில் இருவர் 2009 மத்திய செயலவையின் உறுப்பினர்களாவர். அவர்கள் மத்திய செயலவையின் உத்தரவுகளின்படிதான் நடந்து கொண்டனர். கட்சிக்கு எதிராக எந்தவித பணிகளிலும் ஈடுபடவில்லை. அவர்களுக்கு வழங்கப்பட்ட கடிதங்கள் செல்லாது என முடிவெடுக்கப்பட்டுள்ளதால், அவர்கள் எப்போதும்போல் தங்களின் பொறுப்புக்களின் மூலமாகச் செயல்படலாம்” என்றும் சுகாதார அமைச்சருமான சுப்ரமணியம் விளக்கினார்.

வழக்கு தொடுத்த பழனிவேல்-மற்றவர்களின் உறுப்பியம் குறித்த நிலை

Palanivelபத்திரிக்கையாளர் சந்திப்பின்போது, நிருபர் ஒருவர் “வழக்கு தொடுத்ததற்காக பழனிவேல் மீதும் மற்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து கடிதம் ஏதும் அனுப்பப்படுமா?” எனக் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த சுப்ரமணியம் “நாங்கள் கடிதம் எதனையும் அனுப்பப்போவதில்லை. மாறாக கட்சியின் சட்டப்படி எல்லாம் நடைபெறும். சட்டம் இயல்பாகவே தன் கடமையைச் செய்யும்” என்று கூறினார்.

மஇகா அமைப்பு விதிகள் பிரிவு 91 – மஇகா மத்திய செயலவையின் முன் அனுமதியின்றி அல்லது அதன் கவனத்திற்குக் கொண்டுவராமல் ஒருவர் கட்சி விவகாரத்தை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றால் அவர் இயல்பாகவே தனது கட்சி உறுப்பியத்தை இழந்து விடுகின்றார் எனத் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.

இந்த அமைப்பு விதியின்படி பழனிவேலுவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மற்றவர்களும் இயல்பாகவே தங்களின் கட்சி உறுப்பியத்தை இழந்துவிடுகின்றார்கள் என ஒரு சில தலைவர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர்.

இருப்பினும் இந்த சர்ச்சை குறித்து எந்தவித முடிவையும் இன்றைய மத்திய செயலவை எடுக்கவில்லை எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.