Home கருத்தாய்வு சபா விவகாரத்தில் நஜிப் அரசுக்கு பெரும் பின்னடைவு?

சபா விவகாரத்தில் நஜிப் அரசுக்கு பெரும் பின்னடைவு?

546
0
SHARE
Ad

Najib-Feature---3

கோலாலம்பூர், மார்ச் 4 – கடந்த சில வாரங்களாக சுலு சுல்தான் படையைச் சேர்ந்த ஊடுருவல்காரர்களுக்கும் , மலேசிய ராணுவத்திற்கும் இடையே நடைபெற்று வரும் தொடர் சண்டையில் 6 காவல்துறையினர் உட்பட இதுவரை 12 பேர் பலியாகி உள்ளனர்.

நாடெங்கிலும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் இவ்விவகாரம் குறித்து பல குழப்பங்கள் நீடித்துவருகின்றன. தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் இவ்வேளையில் இது போன்ற சம்பவங்கள் நிகழ்வது பிரதமர் நஜிப் துன் ரசாக் தலைமையிலான அரசாங்கத்திற்கு அவப்பெயரைப் பெற்றுத்தரப்போகிறது என்பது பல அரசியல் தலைவர்களின் கருத்து.

#TamilSchoolmychoice

மேலும் காவல்துறையினரின் இறப்பு சம்பந்தமாக முன்னுக்குப்பின் முரண்பாடான செய்திகளை போலீஸ் தரப்பு வெளியிடுவது மற்ற அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை  ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி  முக்கிய எதிர்க்கட்சித்  தலைவர்களில் ஒருவரான  லிம் கியாட் சியாங் கூறுகையில், “அரசாங்கம் சபா விவாகாரத்தில் சரியான தகவல்களை தெரிவிக்காமல் மூடி மறைக்கிறது. சரியான முறையில் இப்பிரச்சனையை கையாண்டால் இதை உடனடியாக தடுத்து நிறுத்தலாம் ” என்றார்.

இவ்விவகாரத்தை முன்வைத்து பல எதிர்க்கட்சிகள் நாட்டின் பாதுகாப்பு குறித்து உள்துறை அமைச்சுக்கு கேள்வி எழுப்ப, அதற்கு நஜிப் தரப்போ இது எதிர்க்கட்சிகளின் சதிவேலை என்று அவர்கள் பக்கம் திசை திருப்பியுள்ளது.

இதுபற்றி  பிரதமர் நஜிப் கூறுகையில், ” இது நமது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம் இதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்கக்கூடாது காரணம் இதில் பல மனித உயிர்கள் சம்பந்தப்பட்டு உள்ளன” என்றார். மேலும் அவர் ” எதிர்வரும் தேர்தலை ஒட்டி எதிர்க்கட்சிகள் இவ்விவகாரத்தை வைத்து மக்கள் ஆதரவைப் பெற்று விடலாம் என்று வெறுக்கத்தக்க வகையில் அரசியல் செய்கிறார்கள்” என்று சாடியுள்ளார்.

இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் அன்வார்  இப்ராஹிம் பேசுகையில், தனக்கும் இப்பிரச்சனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், தன் மீது ஆளும் கட்சியினர் வீண் பழி போடுவதை விட்டுவிட்டு மேலும் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கு வழியைத் தேடுமாறு நஜிப்புக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இந்த விவகாரத்தில் பிலிப்பைன்ஸ் பிரதமர் பெனிக்னோ அக்குவினோ தனது அறிக்கையில் ஊடுருவல்காரர்களை கடுமையாக விமர்சித்து , உடனடியாக அவர்கள் தங்கள் ஊடுருவலைக் கைவிடவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் இதுபற்றி ஊடுருவல் கும்பலைச் சேர்ந்த  கிராமின் பேச்சாளர் பிலிப்பினோ வானொலி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தாங்கள் இந்த சண்டையில் பின்வாங்கப்போவதில்லை என்றும், சுல்தான் தரப்பு அமெரிக்க அரசாங்கத்தின் துணையை நாடப்போவதாகவும் தெரிவித்தார்.மேலும் “மலேசியர்கள் சபாவை சொந்தம் கொண்டாடக்கூடாது காரணம் சபா எங்களுடையது ” என்று கூறியுள்ளார்.

மலேசியா சபாவை சுல்தானுக்கு சொந்தமானதாக அறிவிக்க வேண்டும் மற்றும் வர்த்தக ரீதியாக சபா மாநிலத்தின் மூலமாக கிடைக்கும் லாபத்தையும் பங்கிட்டு கொடுக்க வேண்டும் என்றும்  விடாப்பிடியாக நிற்கிறது கிராமின் தரப்பு.

வரும் ஜூன் மாதம் தேர்தல் என்று எண்ணிக்கொண்டு இருக்கும் வேளையில் சபா விவகாரம் மேலும் மோசமடையுமானால் நஜிப் தேர்தலை தள்ளி வைக்கும் நிலைக்கு தள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியாவில் இருக்கும் பிலிப்பினோ தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“உங்களுக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சலை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. அதேநேரத்தில் ஒரு சில அமைப்புகளால் வெளியிடப்படும் தவறான தகவல்களை வைத்து எந்த ஒரு நடவடிக்கைகளிலும் இறங்கி விடாமல் அமைதிகாக்க வேண்டும் ” என்று பிலிப்பினோகாரர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பே கேள்விக்குறியாகி இருக்கும் இந்த நேரத்தில் கட்சிகள் ஒருவரை ஒருவர் பழிபோடுவதை தவிர்த்து இவ்விவகாரத்தில் சுமூகத் தீர்வை தேடினால் மேலும் பல உயிர்கள் பலியாவதைத் தடுக்கலாம் என்பதே அனைத்து பொதுமக்களின் கருத்தாகும்.

தேர்தல் சமயத்தில் விஸ்வரூபம் எடுத்திருக்கும் இவ்விவகாரத்தை நஜிப் அரசு எப்படி கையாளப்போகிறது என்பதே அனைவரின் எதிர்பார்ப்புமாகும்.