ஐதராபாத், ஏப்ரல் 1 – ஆந்திராவின் புதியத் தலைநகரை வடிவமைக்கும் திட்டத்தை சிங்கப்பூர் அரசு அளித்துள்ளது. அதில் சில திருத்தங்களை ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு கூறியுள்ளார்.
அதன்படி, திருத்தங்களுக்குப் பிறகு இறுதிகட்ட வடிவமைப்பு அறிக்கை ஜூன் மாதத்துக்குள் தயாராகும் என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. ஒருங்கிணைந்த ஆந்திராவில் இருந்து பிரித்து தெலங்கானா தனி மாநிலம் கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டது.
அதன்படி, இரு மாநிலங்களுக்கும் ஐதராபாத் அடுத்த 10 ஆண்டுகளுக்கு தலைநகராக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஆந்திராவுக்கு என்று தனி தலைநகர் அமைக்கும் பணி தொடங்கியது.
விஜயவாடா மண்டலத்தில் இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆந்திராவின் புதிய தலைநகரை வடிவமைப்பது குறித்து சிங்கப்பூர் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, புதிய தலைநகருக்கான வடிவமைப்பு குறித்த தனது முதல்கட்ட அறிக்கையை சிங்கப்பூர் அரசு இரு தினங்களுக்கு முன்பு தாக்கல் செய்தது. இது குறித்து ஆந்திர அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
“புதிய தலைநகருக்கான வடிவமைப்பு குறித்து சிங்கப்பூர் அரசு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது”.
“ஆந்திர முதல்வருடன் பல்வேறு மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளும் சென்றுள்ளனர். சிங்கப்பூர் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ஈஸ்வரன் தலைமையில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது”.
“இந்த அறிக்கையில் சில திருத்தங்களை முதல்வர் கூறியுள்ளார். அதன்படி, இந்த திருத்தங்களை செய்து, இறுதி அறிக்கையை சிங்கப்பூர் அரசு வரும் ஜூன் மாதத்துக்குள் சமர்ப்பிப்பதாக கூறியுள்ளது”.
“புதிய தலைநகரை வடிவமைப்பது கொடுப்பது, அதில் சிங்கப்பூர் நிறுவனங்கள் ஈடுபடுவது குறித்தும் ஏற்கனவே இரு தரப்புக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தலைநகருக்காக சுமார் 32 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. புதிய தலைநகரை உருவாக்கும் பணியை மூன்று கட்டங்களாக செயல்படுத்த சிங்கப்பூர் திட்டமிட்டுள்ளது.
மொத்தம் 7,325 சதுர கி.மீ. பரப்பளவில் புதிய தலைநகரம் அமைக்கப்படுகிறது. முதல்கட்டமாக 125 சதுர கிலோ மீட்டருக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இது நிறைவேற்றப்படும். இதனிடையில் மற்ற இரண்டு கட்டங்களுக்கான வடிவமைப்பு பணிகளும் நடந்து வருகின்றன.