Home நாடு “ம இ காவின் இன்றைய குழப்பங்களும் – அதன் வருங்கால தலைமைத்துவமும்” – பெரு.அ. தமிழ்மணி...

“ம இ காவின் இன்றைய குழப்பங்களும் – அதன் வருங்கால தலைமைத்துவமும்” – பெரு.அ. தமிழ்மணி கண்ணோட்டம்

641
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 2 – மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சிக்கு இப்போது தேவைப்படுவது தன்னலமற்ற, தூர நோக்குள்ள ,விவேகமான, ஆற்றலான, நம்பிக்கைக்குப் பாத்திரமான மக்களுடன் நெருக்கமாக பழக்கூடிய தேசியத் தலைவரும் –

மேலும் அவருடன் கூட்டுத்தலைமைத்துவத்தை வழங்கககூடிய ஒருமித்த கருத்திணைப்பு உள்ளவர்களும் என்பதை ம இ கா பேராளர்களும் அதன் கிளைத்தலைவர்களும், அதனுடைய ஆறு லட்ச உறுப்பினர்களும். தீர்மானிக்கவேண்டிய, இக்கட்டான சூழ்நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளார்கள்

Tamil Maniபிரதிநிதித்துவம் கேள்வியாகுமா?

#TamilSchoolmychoice

மலேசிய இந்தியர்களை நடப்பு.தேசிய முன்னணி. அரசாங்கத்தில் முழுமையாக பிரதிநிதிக்கும் கட்சியாக ம இ கா இருந்து வருகிறது.1946ல் தொடங்கிய அதனுடைய பயணம் விரும்பியோ விரும்பாமலோ இன்றும் தொடர்கிறது.

அதனால் அக்கட்சியை பிரதிநிதித்து இரண்டு முழுஅமைச்சர்கள் இரண்டு ,துணையமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், செனட்டர்கள், மாவட்ட மன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகிய பதவிகளும் இன்னும் பல அரசு சார்புள்ள நிறுவன, நிர்வாக வாரியங்களிலும் பல பதவி பரிமாற்றங்களும் தொடரவே செய்கின்றன.

எனவே தெளிந்த நீரோடை போன்று பயணித்த தேசிய முன்னணியின் இந்த தொடர் பயணத்தில், 2008 ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலுக்குப் பிறகு பினாங்கு, பேராக், கெடா, சிலாங்கூர் போன்ற மாநிலங்களில் ம இ காவின் நிலை மிகவும். தர்மசங்கடமானது..

சரி கட்ட வேண்டிய சரிவுகள்!

அதே தாக்கம் பகாங்,நெகிரி போன்ற மாநிலங்களிலும் கடும் உரசலை ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவால் ம இ காவின் பங்களிப்பு அரசாங்கத்தில் சரச்சையாகியுள்ளது.

அதாவது, மேற்கண்ட மாநிலங்களின் ஆட்சிக்குழுவில் ம இ காவின் அதிகார வரம்புகள் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளன. ம இ காவின் செல்வாக்கு குறிப்பாக இந்தியர்களின் ஆதரவை பெருமளவு அந்த மாநில அரசுகள் இழந்திருக்கின்றன.

இதே நிலைப்பாடு தொடருமேயானால் மற்ற மாநிலங்களிலும் ம இ கா பெரும் சரிவை சந்திப்பது தவிர்க்க முடியாமல் போய் விடும் என்பதில் இரண்டுவகையான கருத்துக்கு இடமில்லை!

ம இ காவின் அரசியல் பயணம்!

MIC Logo 298 x 295இப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில் செல்லும் ம இ காவின் பயணம் எத்தகைய கட்டமைப்புக்கு மாற வேண்டும் – மாற்றிக் கொள்ள வேண்டும் – என்பதற்கான விவாதங்கள் இன்று எல்லா மட்டங்களிலும் தற்போது நடைபெறவே செய்கின்றன.

ம இ காவின் முன்னாள் தலைவர் டத்தோஶ்ரீ சாமிவேலு தமது 32 ஆண்டுகால தலைமைத்துவத்தில் ஏற்படுத்தியிருக்கும் பல நல்ல மாற்றங்களும் – அதேவேளையில் அவரது சில  தவறான நடவடிக்கைகளும் இன்றும் பலரிடம் சர்சசையாகித் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இதற்குரிய ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என்ற அடிப்படையில் பலரிடம் விவாதம் தொடருமேயானால் அதற்குரிய தீர்ப்பை அடைய நீண்ட நாள் காத்திருக்க வேண்டி வரலாம்.

அதனால், அவரைப்பற்றிய சர்ச்சையை இனி எந்த வகையில் யார் பயன்படுத்தத் துவங்கினாலும் தற்போது. கட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை அது தீர்க்கவே உதவாது.

முதல் கோணல் முற்றிலும் கோணலானது!

அதனால், இன்றைக்கு டத்தோஶ்ரீ ஜி.பழனிவேல் 2010 டிசம்பரில் ம இ கா இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்ட காலத்திலிருந்து,  கடந்த ஐந்து ஆண்டுகளில் ம இ காவுக்கு நம்பிக்கையான தலைவராக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகின்ற தலைவராக மாறியிருக்கிறாரா?

Palanivel MIC Presidentஅல்லது அப்படியொரு.எதிர்பார்ப்புக்குரிய தலைவராக மாற்றப்பட்டிருக்கிறாரா? என்பதை சரியாக தீர்மானிக்க வேண்டியவர்கள் மஇகா கிளைத்தலைவர்களே!

அப்படியொரு இயல்பான மாற்றத்திற்கு பழனி தன்னை இதுவரை தயார்ப் படுத்திக்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கவே செய்கிறார்கள். இதனால் ம இ காவின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்படும் என்ற கருத்தும் வலுவாகியுள்ளது. ம இ கா இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பழனி, 2011-இல் தனது தலைமையில் கட்சியின் தேர்தல் மாநாட்டை நடத்தியிருக்க வேண்டும். அப்படி அவர் நடத்தியிருப்பாரேயானால், இன்றைக்கு கட்சியில் ஏற்பட்டிருக்கும். பல நெருக்கடிகளை அவர் தவிர்த்திருக்கலாம்.

சாமியின் தோளில் சவாரி!

samyvellu2009 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட நிர்வாகத்தின் அடிப்படையில்தான் சாமிவேலு தமது தலைமைத்துவத்தை பழனிக்கு மாற்றி விட்டார். தலைவர் பதவியை ஏற்றுக்கொண்ட பழனி,  அடுத்த கட்டமாக தேர்தலை நடத்தி தன்னை தன்னிகரற்ற தலைவராக மீண்டும் பிரகடனப்படுத்தியிருக்க வேண்டும். அப்படிச் செய்ய முதற்கட்டமாக பழனி தவறிவிட்டார்.

2011ல் நடத்தியிருக்க வேண்டிய கட்சித் தேர்தலை, 2013க்கு நகர்த்திச்சென்று விட்டார். அதுவரை பழனி ஏற்றிருந்த தேசியத்தலைவர் பதவி இடைக் காலத்திற்குரியது!

அதைப்போலவே, அதுவரை முதலாவது உதவித் தலைவராகயிருந்து வந்த, டத்தோஶ்ரீ டாக்டர் சுப்ரமணியம் துணைத்தலைவராகப் பொறுப்பேற்று இருந்ததும் ஓர் இடைவெளியை. நகர்த்தும் நடைமுறைக்குரியதுதான் என்பதை பழனி எண்ணிப்பார்ககத் தவறிவிட்டார்.

அதனால், 2011ல் கட்சித்தேர்தலை நடத்தி, அதன் மூலம் கட்சியின் தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கு இருக்கிற இடைக்காலம் என்ற வார்த்தையை. மீட்டெடுத்து இருக்க வேண்டிய பழனி, வழக்கம்போல, தனது பதவி மேல் இருந்த பயத்தினால் தேர்தலை நடத்தாமல் கட்சியில். நெருக்கடியை உருவாக்கி விட்டார்.

ஆம்! கட்சித் தேர்தலை நடத்தினால் டாக்டர் சுப்ரா தன்னை எதிர்த்து நிற்கக்கூடும் என்ற  ஒரே காரணத்திற்காகவே தேர்தலைத் திட்டமிட்டே தள்ளிப்போட்டார். போட்டியென்று ஒன்று வந்தால், அதை நேருக்கு நேர் எதிர் கொள்வதை விட, அதை எப்படி தவிர்ப்பது என்பதுதான் பழனி,  இதுவரை பின்பற்றி வந்துள்ள நடைமுறை பழக்கமாகும்.

அப்படியே போட்டியென்று, ஒன்று நடைபெற்றாலும் அதை தமது சுயபலத்துடன் எதிர்கொள்வதை விட, இன்னொருவர் பலத்துடன் அதை எதிர்கொள்வது எதிர்ப்து என்ற வழக்கத்தை பழனி தொடர்ந்து பின்பற்றி வந்துள்ளார். அந்த வகையில்தான் கடந்த காலங்களில் சாமிவேலு தோளில் ஏறி சவாரி செய்து வந்துள்ளார். அவரின் பலத்தால்தான் துணைத்தலைவர் தேர்தலில் இரண்டு முறை, முன்னாள் துணைத்தலைவரான டான்ஶ்ரீ சுப்ரமணியத்தை பழனியால் வெற்றி கொள்ளவும் முடிந்தது.

அவ நம்பிக்கையின் சின்னம்!

Dr S. Subramaniamபொதுவாக பழனிக்கு எப்போதும் தனது வெற்றி குறித்தான நம்பிக்கையை விட, தனது தோல்வி குறித்தான அவநம்பிக்கையே அதிகமாக மேலோங்கியிருக்கும்.

அதனால்தான் அவரால் துணிச்சலாக 2011ல் தலைவர் தேர்தலை எதிர்கொள்ள முடியவில்லை. டாக்டர் சுப்ரா தலைவர் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்டாலும், அதேவேளை சுப்ராவுக்கு சாமி தனது ஆதரவையும் வழங்கினால் தமது நிலை என்னவாகுமோ என்ற பயம், பழனியைப் பெருமளவு தடுமாற வைத்துள்ளது.

அவரின் அச்சம் ஒருபுறம் நியாயமானது என்றாலும், அவற்றையெல்லாம் கட்சிக்குள் எதிர்த்து  தீர்வு காண முடியாதா என்ன?

அப்படி தீர்வு காண முடியாத நிலை ஏற்படுமேயானால் போட்டியை சந்திப்பதில் ஏதும் தவறேதும் இல்லையே? அதற்காக 2013 வரை, தேர்தலைத் தள்ளிப்போட வேண்டுமா என்ன? சரி! 2013ல்தேர்தலை நடத்துவதற்கு முடிவான பிறகு, பின்னர் எதற்காக பிரதமரைத் தலையிட வைத்து தேசியத் தலைவருக்கான போட்டியை தவிர்க்க வேண்டும்?  தேசியத் தலைவருக்கான போட்டி நடத்தப்பட்டிருந்தால், கட்சியின் தலைவர் சுப்ராவா?_பழனியா? என்பது திட்டவட்டமாக தெரிந்திருக்கும் அல்லவா? அந்த சூழ்நிலையையும் திட்டமிட்டு பழனி தவிர்த்தார்.

பயம்! பயமே வாழ்வானது!

எனவே பழனியால் தேசியத் தலைவர் தேர்தலைச் சந்திக்க திறனற்றுப் போனதால்தான் கட்சியில் அடுக்கடுக்கான சர்சசைகளும் வீண் விதண்டாவாதங்களும் தொடர் கணைகளாகி விட்டன.

சரி, எப்படியோ தேசியத் தலைவருக்கான போட்டியை தவிர்த்துக் கொண்ட.பழனி, பின்னர் எதற்காக தலைவருக்கான தேர்தலுக்கு தமக்கு பேராதரவு இருப்பதுபோல  காட்டுவதற்கு கிளைகளிடமிருந்து ஆதரவு மனுக்களைத் திரட்டுவதில் ஆர்வம் காட்டினார். அதற்கு அவசியமே இல்லையே? எதிர்த்துப் போட்டியிட வேண்டிய சுப்ராவே பிரதமரின் தலையீட்டால்,  போட்டியிலிருந்து விலகிகொண்டு, பழனிக்கு ஆதரவாக 500க்கும் மேற்பட்ட மனுக்களுடன் முன்மொழிந்தார்.

இப்படியொரு சூழ்நிலைக்கு தேசியத் தலைவர் தேர்தலைக் கொண்டு வந்து நிறுத்திய பழனி, இன்றைக்கு 90 சதவீத ஆதரவு பெற்று தலைவரானதாக அடிக்கடி பிதற்றல் அறிக்கையை ஏன்  வெளியிட்டு வருகிறார் என்பதுதான்  இன்னும் வியப்பாகயிருக்கிறது.

போட்டியென்று ஒன்று இருந்தால்தானே, அதனுடைய பின்னணியை வைத்து வெற்றி எது? தோல்வி எது? என்று தீர்மானிக்க முடியும். அப்படியொரு நுழைவுப் பாதையையே முற்றாக அடைத்துவிட்டு பழனிக்கு எங்கிருந்து வந்தது வெற்றி?

அதாவது அவரின் அரசியல் பயணத்தில் பெரும்பாலும் முதுகுக்குப் பின்னால் குத்தியே, பெருமளவு சாதித்தவையே அதிகம் என்பதால்,

அவர் யாருக்கும் எப்போதும் உண்மையாக இருந்ததே கிடையாது. அந்த அடிப்படையில்தான் அவர் பிரதமர் தலையிட்டு செய்து வைத்த சமரசத்தின் அடிப்படையான நோக்கத்தையே தற்போது தூக்கியெறிந்திருக்கிறார்.

வக்கற்ற வாக்குறுதியா?

2016ல் பதவி விலகிச்செல்வதாக ஒத்துக்கொண்டதையே இப்போது அவர் மறந்திருக்கிறார் அல்லது மறைத்திருக்கிறார் அதுமட்டுமா? 2016ல் பதவி விலகிச்செல்ல ஒத்துக்கொண்ட அவர், தேசியத் தலைவர் பதவி தனது கைக்கு வந்தவுடன், அதுவரை, தான் மற்ற பதவிகளுக்குப் போட்டியிடுபவர்களுக்கு நடுநிலையாக நடந்து கொள்வதாக அறிவித்து வந்த பிரகடனத்தை உடனடியாகத் தூக்கியெறிந்துவிட்டு, தனக்கென்று தனியே ஓரணியை களத்தில் இறங்கினார்.

அந்த அணியின் வெற்றிக்கு பிரச்சாரமும் செய்தார். அப்படி பிரச்சாரம் செய்யும் எண்ணமும் திட்டமும் கொண்டவரான இவரே தேர்தல் குழுத்தலைவராக மிகவும் தந்திரமாகப் பொறுப்பும் ஏற்றுக்கொண்டார்.

இது! எப்படிப்பட்ட ஜனநாயகம் என்பதை பழனியிடமிருந்துதான் படித்துக் கொள்ள வேண்டியுள்ளது. இவரின் குருநாதரும் அரசியல் வழிகாட்டியுமான சாமிவேலு கூட, தேர்தலில் தனக்கென்று ஓர் அணியை அமைத்துக்கொண்டு செயல்பட்டபோது கூட, அவர் தன்னை எந்த சந்தர்ப்பத்திலும் தேர்தல் குழுத் தலைவராக அறிவித்துக்கொண்டது கிடையாது. இன்று அந்த வழிகாட்டியையே தூக்கி விழுங்கிவிடும் அளவுக்கு, பழனி அரசியல்.நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார் என்றால் –

பலே கில்லாடி யார் என்று விளங்குகிறதா என்பதை ம இ கா வினர் சரியாக எடை போட்டுப் பார்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றே தெரிகிறது.

தேர்தல் முறைகேடுகள்

இப்படிப்பட்ட மனப்பான்மை கொண்ட பழனியின் தலைமையில் நடைபெற்ற தேர்தலில்,

கள்ளவாக்குகள் –

ஒழுங்குமுறையற்று கலந்து கொண்ட தொகுதிப் பேராளர்கள் –

அனுமதிக்கப்படாத கிளை வழி பேராளர்கள் நுழைவு –

தேர்தல் காலங்களில் அனுமதிக்கப்படாத புதிய கிளைகள் –

நள்ளிரவு வரை வாக்கு எண்ணிக்கையை நடத்திச்சென்று தேர்தல் முடிவை விடியற்காலை ஐந்தரை மணிக்கு அறிவித்த விந்தை –

இப்படிப்பட்ட விசித்திரங்கள் பல நிறைந்த தேர்தலை நடத்தி, தன்னை ஜனநாயகத்தின் காவலராகக் காட்டியுள்ளார் பழனி! அவர் முதன் முதலாகப் பொறுப்பேற்று நடத்திய தேர்தல் திட்டமிடப்பட்டே இன்றைக்கு வில்லங்கமாக முடிந்திருக்கிறது.

அதனுடைய எதிரொலியால்தான் இன்று சங்கங்களின் (ROS)  பதிவு இலாகா கட்சி விவகாரத்தில் நுழைய வேண்டிய அவலமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இப்போதுகூட  இதற்குரிய பழியையும் புகார்தாரர்கள் மீது போட்டு எப்படியாவது தப்பித்துக் கொள்ளத்தான் அவர் முயல்கிறாரே ஒழிய, தேர்தல் முறைகேட்டிற்கு அவர் எந்த வகையிலும் பொறுப்பேற்றுக் கொண்டவராகத் தெரியவில்லை.

திட்டமிடப்பட்ட திருப்பங்கள்

தேர்தலில் கள்ளத்தனமாக திட்டமிடப்பட்டு தோற்கடிக்கப்பட்டவர்கள் எப்படி புகார் செய்யாமல் இருப்பார்கள்? முதலில் கட்சித் தலைவரிடம் புகார் வந்த போதே அதற்குரிய தீர்வை கண்டிருக்க வேண்டும்.

அதற்குரிய தீர்வுக்கு வழி காணமுடியாத அவரே சங்கங்களின் பதிவு இலாகா நோக்கிப் புகார் செய்தவர்களைப் பயணப்படத் தூண்டியிருக்கிறார் என்றால், பழனியின் தலைமைத்துவ ஆற்றல் எத்தன்மையானது என்பதை ம இ கா உறுப்பினர்கள்தான் எண்ணிப் பார்ககவேண்டும்.

இதுவொரு புறம் இருக்க!

சங்கங்களின் பதிவு இலாகா நோக்கி புகார் சென்ற பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

அதையொட்டி, மறு தேர்தல் நடத்தியோ, அல்லது பேச்சு வார்த்தைகளின் மூலமாகவோ, தவறுகளை இலகுவாக சரி செய்திருக்க வேண்டும். இந்த நடவடிக்கையில் தேவையில்லாமல் காலம் தாழ்த்தி வந்ததால் கட்சியின் பதிவு ரத்தாகும் நெருக்கடிக்கு அடுத்து நகர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது!

அதையொட்டி பெருங் களேபரத்துடன் நடைபெற்ற மத்திய செயலவைக் கூட்டத்தில் தலைவரும் துணைத்தலைவரும் சங்கங்களின் பதிவு இலாகாவை சந்தித்து விளக்கம் பெறுவதென முடிவு காணப்பட்டது.

ஆனால் அந்த முடிவுக்கு நேர்மாறாக தலைவர் பழனி, துணைத் தலைவரைத் தவிர்த்து விட்டு. வழக்கறிஞர் ஒருவருடனும் அடுத்து இந்நடவடிக்கைக்கு அறவே சம்பந்தமில்லாதவரான பாராட் மணியம் என்ற வி.சுப்ரமணியத்துடன், பழனி பதிவு இலாகா நோக்கி பயணம் புறப்பட நேர்ந்தது என்றால் பழனியின் நடவடிக்கைக்கு என்னதான் காரணமாக இருக்க முடியும்  என்பதை ம இ கா கிளைத் தலைவர்கள் எண்ணித்தான் பார்க்க வேண்டும்.

பிரதமர் தலையீடும் அதன் விளைவும்

Najib Tun Razak Prime Ministerஇத்தகைய நடவடிக்கைக்குப் பிறகு பிரதமர் மூன்று முறை தலையிட்டு சுமுகமான சூழ்நிலைக்குப் பிரச்சனையை கொண்டு வந்தும் அதை அவர் காதில் போட்டுக் கொண்டு, ஆக்கபூர்வமா .காரியத்தில் கவனம் செலுத்தியதாக தெரியவில்லை.

இறுதியில் நீதிமன்ற நடவடிக்கையின் மூலம், நீதிமன்றத்தில் தீர்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் தொடர்கிறது. இந்த வழக்கும் இன்று 2.4.2015இல் மறு விசாரணைக்கு வருகின்றது.

எனவே இந்த தொடர் நடவடிக்கையின் பின்னாலும் முன்னாலும் யார் காரணம் என்பதை ம இ காவினர் சரியாக எண்ணிப் பார்த்தால் உண்மையை அறியவும், அதன் ஆழத்தை கணக்கிடவும் முடியும். பழனியின் தலைமையில் இன்று கட்சியின் கட்டுப்பாடு கேள்வியாகவும், அக்கட்சியின் நிர்வாக கட்டமைப்பு முற்றிலும் சீர்குலைந்தும் பொதுமக்களின் நம்பிக்கையை பெறுவதில் பெரும் பின்னடைவும் ஏற்பட்டுள்ளது.

இத்தகைய பல்வேறு பின்னடைவுகளிலிருந்து கட்சியைத் தலைத் தூக்க வைக்க வேண்டுமானால், அவசர கால நடவடிக்கையில் இறங்கி தீர்வு காண, நாம் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ளது மாதிரி சிறந்த தலைவர் தேவைப்படுகிறார்.

கடந்த ஐந்து ஆண்டுகால பழனியின் தலைமைத்துவத்தில் கட்சியின் அடித்தளம் என்று கருதப்படுகின்ற கிளைத் தலைவர்களின் தொடர்பை முற்றாக இழந்திருக்கிறார்.

அதற்கடுத்து கட்சியின் உயிர்ப்பானவர்கள் என்று கருதப்படுகின்ற தொகுதித் தலைவர்களின் உறவை பெருமளவு துண்டித்து இருக்கிறார். அதற்கடுத்து கட்சியின் மேம்பாட்டிற்கு நல்ல ஆலோசனைகளை வழங்கக்கூடிய ஆற்றலான மத்திய செயலைவயின் கணிசமான ஆதரவையும் முறித்திருக்கிறார்.

அதுமட்டுமல்ல! கட்சியின் ஆறு லட்ச உறுப்பினர்களுடன், மக்கள் சந்திப்பு என்றளவில் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடத்துவதையும் அவர்களுக்கும் கட்சிக்கும் இருக்க வேண்டிய நட்புறவை அலட்சியப்படுத்தியும் இருக்கிறார்.

இவற்றிற்கிடையே, இவரை ம இ கா தலைமையகத்திலோ! அவரின் அமைச்சு அலுவலகத்திலோ தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அவரின் வீட்டிலோ சந்தித்துப்பேச முடியாத தலைவராகவே இன்னும் இன்றும் இருந்து வருகிறார்.

அதாவது மக்களின் பிரச்சனைகளை நேரில் சந்திக்கவும் அவற்றை களையவும் ஆர்வமும் அக்கறையும் அற்றவராகவே தொடர்ந்து இருந்து வருகிறார். அதேவேளை தொலைபேசியில் அறவே தொடர்பு கொள்ளமுடியாத அதிசய மர்ம மனிதராகவும் மறைந்து வாழ்கிறார்.

இத்தகைய குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்கிறதா? இல்லையா?  என்பதை கண்டறிய விரும்பினால் ஜோகூர் முதல் கெடா வரை ஒரு சுயேச்சையான குழுவைக் கொண்டு ஆய்வு நடத்தி பார்த்து விடலாம்.

எனவே! அவர் மக்களுடனான சந்திப்பு என்பதெல்லாம் தேர்தல் சமயத்தில் வாக்கு கேட்கும் படலத்தைத் தவிர,  சந்தர்ப்பத்தைத் தவிர வேறு எந்த காலத்திலும் மக்களுடன் உறவோ, தொடர்போ வைத்துக்கொள்வது கிடையாது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தலைமைத்துவ மாற்றம் வேண்டும் என்ற கருத்து மிகவும் பலமாக கட்சியிலும், சமுதாயத்திலும் பதிவாகியுள்ளது.

அடிக்கடி, தாம் ஓர் அரசியல் கட்சிக்குத் தலைவர் என்பதை பழனி முற்றிலும் மறந்து விடுகிறார். ம இ காவை ஆசிரமம் போன்று நினைக்கிறாரோ என்று நினைக்கும் அளவுக்கு அவரின் போக்கு பலரைக் குழப்பியுள்ளது.

ஆரோக்கியமான வழியில் மாற்றம்!

எனவே! 3800 ம இ கா கிளைகளில் எத்தனை கிளைகள் தேசியத் தலைவர் தேர்தலுக்குத் தகுதி பெறுகின்றன என்பதை திட்டவட்டமாக உறுதிப் படுத்திக் கொள்ளும் வரைக்கும் ஏனோதானோ என்று பழனி குழறுபடியான  சூழ்நிலையில் தேர்தலை மீண்டும் நடத்தி முடிக்க முடியாது.

அதனால் சரியான நடுநிலையான தேர்தல் குழுவை நியமித்து இரண்டு தரப்பும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அக்குழு நடந்து கொள்வதைப் பொறுத்தே, ம இ காவில் அமைதியைக் காண முடியும்.

அதைத் தவிர்த்து  2013ஆம் ஆண்டு தேர்தல் போல, இன்னொரு முறைகேடுகளுக்கு வழிவகை காண முற்பட்டால், அதன் விளைவு கட்சியின் எதிர்காலத்தை பாதிக்கவே செய்யும்.

அதேபோன்றுதான் தேசியத் தலைவர் தேர்தலுக்குப் பின் நடைபெறும் மூன்று உதவித் தலைவர்கள், 23 மத்திய செயலவைக்கான தேர்தலும் இதுவும் எந்தவகையான முறைகேடுகள் இல்லாமல் நடைபெறவேண்டும்.

இதற்குரிய பேராளர்களையும் முறைப்படுத்திய பிறகே தேர்தலை நடத்தவேண்டும், எப்படியோ சிலர் விரும்பியோ விரும்பாமலோ கட்சியில் ஏற்பட்ட பிளவை நியாயமான தேர்தல் வழிமட்டுமே தீர்வுகாண முடியும்.

அதையே நடுநிலையாளர்களும் எதிர்பார்க்கிறார்கள். அதனால் குழப்பத்திற்கு மேல் குழப்பத்தை ஏற்படுத்தாமல் .தேர்தலை நடத்தி மக்கள் ஆதரவு யாருக்கு என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள சுப்ராவுடன் பழனி மோதுவதைத் தவிர வேறு வழியிருப்பதாக தெரியவில்லை.

இதை நன்கு உணர்ந்தே ம இ காவினரும் காத்திருக்கிறார்கள்!

– பெரு.அ. தமிழ்மணி

(பின்குறிப்பு:  மஇகா  தலைமைத்துவ போராட்டம் குறித்து , மூத்த பத்திரிக்கையாளரும், அரசியல் ஆய்வாளரும், மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் தேசியத் தலைவருமான பெரு.அ.தமிழ்மணி எழுதியுள்ள கண்ணோட்டம் இது. இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் கட்டுரையாளர் பெரு.அ.தமிழ்மணியின் சொந்த, தனிப்பட்ட கருத்துகளாகும். அந்தக் கருத்துகள் செல்லியலின் கருத்துகளோ, செல்லியலைப் பிரதிபலிக்கும் கருத்துகளோ அல்ல. கட்டுரையாளரின் கருத்துகளுக்கு செல்லியல் எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது.)

தமிழ்மணியின் மற்ற எழுத்துப் படிவங்களை maravan madal tamil mani என்ற முகநூல் (பேஸ்புக்)  அகப்பக்கத்தில் காணலாம். கட்டுரையாளரைப் பின்வரும் இணைய முகவரியில் தொடர்பு கொள்ளலாம்: 

wrrcentre@gmail.com