டமாஸ்கஸ், ஏப்ரல் 2 – சிரியா, உள்நாட்டுப் போரின் உக்கிரத்தால் சிதிலமடைந்து வரும் தேசம். 2011-ல், சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத்திற்கு எதிராக அமைதியான வழியில் ஆரம்பித்த மக்கள் போராட்டம் பின்னாட்களில் பெரும் உள்நாட்டுப் போராக வெடித்தது. இதன் காரணமாக இன்று வரை அந்நாட்டு அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
மக்கள் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பின்னாட்களில் அதனை ஆயுதப் போராட்டமாக மாற்றினர். ஒருபுறம் இராணுவத்தின் அராஜகம், மறுபுறம் ஐஎஸ் தீவிரவாதிகளின் அட்டூழியம் என பழகிப்போன மக்கள், இருப்பிடம், மருத்துவம் என அடிப்படை வசதிகளை மறந்து பல நாட்களாகின்றன.
அந்நாட்டு குழந்தைகளும் இரு தரப்பு தாக்குதலில் தப்பிக்க வில்லை. இதுவரை அங்கு 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகவும், 40 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சிரியாவின் நிலையை படம் பிடிக்கச் சென்ற, புகைப்படக்காரர் ஒருவர் இணையத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று உலக அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. காசாவை சேர்ந்த புகைப்பட நிருபரான நாடியா அபு ஷபான், சிரிய மக்களின் வாழ்க்கையை படம் பிடிக்க அங்குள்ள ஒரு நகரத்திற்குச் சென்றுள்ளார்.
அங்கு அவர் 4 வயது சிறுமி ஒருத்தியை பார்த்து தனது கேமராவில் அவளை பதிவு செய்ய முற்பட்டுள்ளார். அப்போது அந்த சிறுமி, புகைப்படக்காரர் தன்னை துப்பாக்கியால் சுட வருகிறார் என பயந்து தனது இரு கைகளையும் தலைக்கு மேலே தூக்கி சரணடையும் பாணியில் நின்றுள்ளார்.
அடுத்த தலைமுறைக்கு அமைதி மற்றும் ஜனநாயகத்தைக் கூட விட்டுச் செல்ல முடியாத சிரியா பிரிவினைவாதிகள், தீவிரவாதத்தையும், பயத்தையும் விட்டுச் சென்று இருப்பதை அந்த புகைப்படம் தோலுரித்து காட்டுகின்றது.