கோலாலம்பூர், ஏப்ரல் 2 – மலேசியாவின் புகழ்பெற்ற பல்பொருள் அங்காடியான 7-லெவனில், நாளிதழ்களுக்கு ஜிஎஸ்டி சேர்த்து விற்கப்படுவதாக, நட்பு ஊடகங்களில் அதன் வாடிக்கையாளர்கள் கடும் விமர்சனம் செய்ததையடுத்து, அந்நிறுவனம் பொதுவில் மன்னிப்பு கேட்டுள்ளது.
நேற்று முதல் அமலுக்கு வந்த ஜிஎஸ்டி (பொருட்கள் மற்றும் சேவை வரி) நாளிதழ்கள் உள்ளிட்ட சில பொருட்களுக்கு கிடையாது.
இது குறித்து 7-லெவன் நிறுவனம் தனது பேஸ்புக் பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று நடந்த சம்பவம் நிச்சயம் எங்களது வாடிக்கையாளர்களை ஆத்திரமடையச் செய்திருக்கும். அதற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றோம். சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தவறு நடந்துவிட்டது. அந்த கோளாறு சரி செய்யப்படும் வரை நாடெங்கிலும் 7-லெவனில் நாளிதழ்கள் விற்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.
இதே தவறு 7-லெவன் நிறுவனத்தின் போட்டியாளரான கேகே மார்ட்டிலும் நடந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து கேகே மார்ட்டும் தனது பேஸ்புக் பக்கத்தில், “அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு. ஜிஎஸ்டி இல்லாத பொருட்களுக்கு எங்கள் அங்காடிகளில் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக ரசீதை கொண்டு வந்து கொடுத்து வரிக்கு தாங்கள் செலுத்திய பணத்தை பெற்றுக்கொள்ளலாம்” என்று குறிப்பிட்டுள்ளது.