கோலாலம்பூர், ஜூன் 23 – நாட்டில் 24 மணி நேரமும் சேவைகளை வழங்கி வரும் 7-லெவன் பல்பொருள் அங்காடி மையங்கள் அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் புதிய தோற்றத்துடனும் அமைப்பு முறைகளுடனும் இயங்கவிருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
முதற்கட்டமாக 200 – க்கும் மேற்பட்ட கிளைகளில் இந்தப் புதிய தோற்ற அமைப்புகள் மாற்றப்படும். தற்போது 7-லெவன் மையங்கள் உரிமப் பரிமாற்றம் (Franchise)அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன.
இந்த மையங்களில் செய்யப்படவிருக்கும் மாற்றங்களில் உடனுக்குடன் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் ஆகியவற்றோடு பயனீட்டாளர்கள் அமர்வதற்கான இடவசதிகளும் செய்யப்படும். இந்தப் புதிய தோற்றங்களுடன் கூடிய 7-லெவன் மையங்கள் கிள்ளான் பள்ளத்தாக்கு, பினாங்கு மற்றும் ஜொகூர்பாரு போன்ற நகர்களில் முதலில் துவங்கப்படும்.
இதற்கிடையில், 1600ஆவது புதிய 7-லெவன் மையம் நேற்று திறக்கப்பட்டது. அந்த திறப்பு விழாவில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அந்நிறுவனத்தின் துணை தலைமைச் செயல்முறை அதிகாரி கேரி பிரவுன், கிள்ளான் பள்ளத்தாக்கில் மட்டும் 150 7-லெவன் மையங்களில் தோற்ற அமைப்புகள் மாற்றப்படும் என்று தெரிவித்தார்.
இந்த ஆண்டு மட்டும் 200 புதிய கிளைகளை திறப்பதற்கும் நடப்பில் இருந்த மற்ற 200 கிளைகளை புதுப்பிப்பதற்கும் 80 மில்லியன் மலேசிய ரிங்கிட் வரை செலவிட அந்நிறுவனம் உத்தேசித்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
அடுத்த 3 ஆண்டுகளில் 600 புதிய கிளைகளை திறப்பதற்கும் தற்போது வர்த்தகத்தில் இருந்து வரும் மேலும் 600 கிளைகளை புதுப்பிப்பதற்கும் அந்த நிறுவனம் உத்தேசித்திருப்பதோடு கனிணி தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதற்கும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக 520 மில்லியன் மலேசிய ரிங்கிட் செலவிடவும், 7-லெவன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுதவிர ஷாஆலம் நகரில் 166,000 சதுர அடி பரப்பளவு உள்ள புதிய விநியோக மையம் ஒன்றை நிறுவுவதற்கும் அந்நிறுவனம் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
தற்போது சபா, சரவாக் மாநிலங்களில் மொத்தம் 68 மையங்களைக் கொண்ட இந்நிறுவனம் அந்த மாநிலங்களிலும் வர்த்தக விரிவாக்கத்தை மேற்கொள்ள தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளது.