ஜெனிவா, ஏப்ரல் 2 – ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களினால் உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அந்நாட்டு அதிபர் அபேத் ரப்போ மன்சூர் காதியின் வேண்டுகோளின் பேரில் ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியா கடந்த 25-ம் தேதி முதல் வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றது.
இந்நிலையில், சவுதி அரேபியா வான்வழித் தாக்குதலால் கிளர்ச்சியாளர்கள் பலர் கொல்லப்பட்டனர். அதே சமயத்தில், இந்த தாக்குதல் காரணமாக கடந்த வாரத்தில் மட்டும் 62 குழந்தைகள் கொல்லப்பட்டதுடன், 30 பேர் படுகாயமடைந்துள்ளதாக ஐநா குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக யுனிசெப் அமைப்பின் ஏமன் பிரதிநிதி ஜூலியன் ஹார்னீஸ் கூறியதாவது:-
“இரு தரப்பிற்கு மத்தியில் நடக்கும் போர் காரணமாக குழந்தைகளுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் இருந்து வருகின்றது. குழந்தைகளின் பாதுகாப்பு என்பது மிக அவசியமான ஒன்றாகும். இதை அனைத்து தரப்பினரும் உணர்ந்து, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போதய நிலையில் ஏமனில், குழந்தைகளின் கல்வி மற்றும் சுகாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் குழந்தைகள் பரிதவிக்கும் நிலையில் உணவு பஞ்சமும் ஏற்பட்டுள்ளது கவலை அளிப்பதாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏராளமான குழந்தைகள் பயத்தில் உறைந்து போயுள்ள நிலையில், அவர்கள் போராளிகளாகவும் மாற்றப்படுவதாக யுனிசெப் குற்றஞ்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.