கோலாலம்பூர், ஏப்ரல் 2 – பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி (ஜிஎஸ்டி) நேற்று முதல் நடைமுறைக்கு வந்ததால், கார் தயாரிப்பு நிறுவனங்கள் கார்களின் விலைகளை குறைப்பதாக அறிவித்துள்ளன.
‘எடரன் டான் சோங் மோட்டார்ஸ்‘ (Edaran Tan Chong Motors), ‘மெர்சடிஸ்-பென்ஸ்‘ (Mercedes-Benz), ‘பெரோடுவா‘ (Perodua), ‘புரோட்டான்‘ (Proton) போன்ற நிறுவனங்கள் அரசின் பரிந்துரைகளுக்கு ஏற்ப இந்த விலை குறைப்பை அறிவித்துள்ளன.
இது தொடர்பாக மெர்சிடஸ்-பென்ஸ் மலேசியாவின் துணைத் தலைவர் மார்க் ரெயின் கூறுகையில், “ஜிஎஸ்டி நடைமுறை காரணமாக எங்கள் கார்களின் விலை குறைந்துள்ளதை நாங்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த விலை குறைப்பு முழுவதும் அரசின் பரிந்துரைககளின் படியும், அதிக இலாபம் ஈட்டப்படுவதை தடுக்கும் ‘ஆண்டி-ப்ராஃபிட்டெரிங் 2011‘ ( Anti-Profiteering 2011) சட்டப்படியும் அறிவிக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
விலை குறைப்பின் படி,மெர்சடிஸ்-பென்ஸ் E300 ப்ளூ டிஇசி ஹைப்ரிட் 2.87 சதவீதம் அளவிற்கு விலை குறைந்துள்ளது. இதன் மூலம் நேற்று முன்தினம் வரை 348,888 ரிங்கெட்டுகள் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த கார்கள், 338,888 ரிங்கெட்டுகளாக குறைக்கப்பட்டுள்ளன. அதேபோல், எடரன் டான் சோங் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் 0.3 சதவீதம் முதல் 2 சதவீதம் அளவிற்கு விலை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
உள்ளூர் கார் தயாரிப்பாளரான பெரோடுவா தனது கார்களின் விலையை 0.1 சதவீதம் முதல் 1.6 சதவீதம் வரை குறைத்துள்ளது.
இதன் காரணமாக, அடுத்த சில வருடங்களுக்குள் மலேசியாவில் கார்களின் விற்பனை வழக்கத்தை விட அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.