கோலாலம்பூர், ஏப்ரல் 2 – வாட்ஸ்அப் ‘வாய்ஸ்கால்’ (Voice Call) வசதி என்றாலே பயனர்கள் பலருக்கு சலிப்பு ஏற்பட்டுவிடும். வாட்ஸ்அப்-ல் வாய்ஸ்கால் வசதி போனமாதமே அறிமுகமாகிவிட்டது, இல்லை இல்லை போனவாரம் தான் அறிமுகப்படுத்தப்பட்டது என்று பலர் கூறிய பொய்யான ஆருடங்களும், யூகங்களுமே இந்த சலிப்பிற்கு காரணம். ஆனால் பயனர்கள் இனி இத்தகைய சலிப்பினை அடையத் தேவையில்லை.
உலக அளவில் வாட்ஸ்அப் அதிகம் பயன்படுத்தப்படும் ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாட்ஸ்அப் வாய்ஸ்கால், அண்டிரொய்டு தளத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது. அண்டிரொய்டு ‘லாலிபாப்’ (Lollipop) தளத்தில் மட்டும் தான் இந்த வசதி மேம்படுத்தப்படும் என்பது போன்ற எந்த வரைமுறைகளும் இல்லாமல் அடிப்படை அண்டிரொய்டு தளத்தில் இருந்தே வாய்ஸ்கால் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது.
நமது வாட்ஸ்அப் வட்டத்தில் இருக்கும் நபர்களை எளிதாக தொடர்பு கொள்ளும் வகையில் ‘கால்’ (Call), ‘சேட்'(Chats), ‘காண்டாக்ட்’ (Contacts) என வாட்ஸ்அப் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் காண்டாக்ட் டேப்பில் நமது வாட்ஸ்அப் வட்டத்தில் இருக்கும் நபர்களின் தொலைபேசி எண்கள் இருக்கும். அவற்றை தேர்வு செய்து கால் பொத்தானை அழுத்தினால் போதும், வாய்ஸ்காலை ஏற்படுத்தலாம். எனினும், இந்த மேம்பாடு ஆரம்பக்கட்டத்தில் இருப்பதால் தேவையான அளவிற்கு துல்லியம் பெறவில்லை.
இது அடுத்த வரும் இரண்டொரு நாட்களில் சரி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ஸ்அப் வாய்ஸ்கால் வசதி தானாகவே மேம்படுத்தப்பட்டது போல் அதன் குறைகளும் தானாகவே சரி செய்யப்படும்.
இந்த இடைவெளியை பயன்படுத்திக் கொள்ளும் சிலர், வாய்ஸ்கால் வசதியை செயல்படுத்த குறிப்பிட்ட குறுந்தகவலை 15 நபர்களுக்கு பகிரவேண்டும் என்பது போன்ற பொய்யான பிரச்சாரங்களையும் வெளியிடத் தொடங்கி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தேவையற்ற அந்த குறுந்தகவல்களை பயனர்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளத்தேவையில்லை.