மாஸ்கோ, ஏப்ரல் 2 – ரஷ்யாவில் 132 பேருடன் சென்ற மீன்பிடி அனைத்துலக கப்பல் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குறைந்தபட்சம் 53 பேர் பலியாகியிருக்கலாம் என்று மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காம்சட்கா தீபகற்பத்தின் ஓகோட்ஸ்க் கடல் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. இதுவரை மீட்பு குழுவினரால் 53 உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர். 15 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை.
இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அந்த பகுதியில் மீன் பிடிப்பதில் ஈடுபட்டிருந்த 25 படகுகளும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
நேற்று நள்ளிரவு நடந்த மீன்பிடி கப்பல் விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. கடலில் மிதந்து செல்லும் பனிப்பாறைகளில் கப்பல் மோதியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன்பிடி கப்பலில் பணியாற்றியவர்களில் பெரும்பாலானவர்கள் லாட்வியா, உக்ரைன், மியான்மர், வனுவாடு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.