புதுடெல்லி, ஏப்ரல் 2 – நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேரில் ஆஜராகுமாறு சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒடிசா மாநிலம் தலபிரா – 2 நிலக்கரி சுரங்கம், ஆதித்யா பிர்லா குழும நிறுவனமான ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு கடந்த 2005-ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்டது.
இதில் முறைகேடு நடந்ததாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், நிலக்கரித்துறை செயலராக இருந்த பி.சி.பாரக், ஹிண்டால்கோ நிறுவனத்தின் தலைவர் குமார்மங்கலம் பிர்லா மற்றும் சுபேந்து அமிதாப், டி.பட்டாச்சார்யா உள்ளிட்ட ஆறு பேருக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.
அவர்கள் ஏப்ரல் 8-ஆம் தேதி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரத் பராசர் கடந்த மாதம் 11-ம் தேதி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து மன்மோகன்சிங் உட்பட அனைவரது சார்பிலும், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனு நீதிபதிகள் கோபால கவுடா, சி.நாகப்பன் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மன்மோகன் சிங்கின் மகள்கள் உபீந்தர் சிங், தமான் சிங் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர். மன்மோகன் சிங் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்,
“குற்றவியல் நடை முறைச் சட்டப்படி, முன்னாள் பிரதமர் ஒருவருக்கு சம்மன் அனுப்ப பெறப்பட வேண்டிய முன் அனுமதி பெறப்படவில்லை. நிலக்கரி சுரங்க உரிமம் ஒதுக்கீடு என்பது அரசின் நிர்வாக ரீதியான முடிவு.”
“இதில் தலையிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. பரிசீலனைக் குழுவின் பரிந்துரை பின்பற்றப்படவில்லை என்ற காரணத்துக்காக குற்றம் நடந்து விட்டது என்ற முடிவுக்கு வர முடியாது. நான் நிலக்கரித்துறை அமைச்சராக இருந்திருந்தால் கூட, தினந்தோறும் பல முடிவுகளை எடுத்திருப்பேன்”.
“அதிகாரிகளின் பல பரிந்துரைகளை நிராகரித்திருப்பேன். அதற்காக என்னை திகார் சிறைக்கு அனுப்பிவிட முடியுமா? கூட்டு சதி நடந்ததற்கான ஆதாரம் இருக்க வேண்டும். குற்றம் புரிந்ததற்கான முகாந்திரம் இருக்க வேண்டும். தனியார் நிறுவனம் ஒன்றுக்கு நிலக்கரி சுரங்க உரிமம் வழங்குவது மட்டுமே குற்றமாகி விடாது” என்று வாதிட்டார்.
ஊழல் தடுப்புச் சட்ட பிரிவுகள் 13 (1) (டி) (3) ஆகியவற்றின் சட்ட அங்கீகாரம் குறித்தும் கேள்வி எழுப்பினார். இதையடுத்து, மன்மோகன் சிங் உள்ளிட்ட ஆறு பேருக்கு சிபிஐ நீதிமன்றம் அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதிகள், சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கின் விசாரணைக்கும் தடை விதித்தனர். இம்மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும் சிபிஐ-க்கும் உத்தரவிட்டனர்.