Home இந்தியா அரசியல் காரணங்களுக்காகவே எங்கள் சொத்துக்கள் முடக்கம் – தயாநிதி மாறன் விளக்கம்!

அரசியல் காரணங்களுக்காகவே எங்கள் சொத்துக்கள் முடக்கம் – தயாநிதி மாறன் விளக்கம்!

520
0
SHARE
Ad

maran 400(1)சென்னை, ஏப்ரல் 3 – அரசியல் காரணங்களுக்காக எங்கள்  சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளது. யாருடைய கைப்பாவையாகவோ அமலாக்கத்துறை செயல்படுகிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்து உள்ளார்.

தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, ஏர்செல் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் உரிமத்தை நிறுத்தி வைத்து, தொழில் அதிபர் சிவசங்கரனை நிர்பந்தம் செய்து ஏர்செல் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கச் செய்ததாகவும்,

அதன் மூலம் மேக்சிஸ் நிறுவனத்திலிருந்து வேறொரு நிறுவனம் மூலம் மாறன் சகோதரர்களுக்குச் சொந்தமான சன் குழுமத்தில் முதலீடு என்ற வகையில் ஆதாயம் அடைந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

#TamilSchoolmychoice

மாறன் சகோதரர்கள் மீது, ரூ.742 கோடி சட்ட விரோத பணப் பரிவர்த்தனை செய்ததாக (கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுதல் தடைச் சட்டம்) சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், அவரின் மனைவி உள்ளிட்டவர்களுக்கு சொந்தமான ரூ.742.54 கோடி அளவிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மத்திய அமலாக்கத்துறை நேற்றுமுன்தினம் பத்திரிகைகளுக்கு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக சொத்துகள் முடக்கம் குறித்து ஒரு நீண்ட பட்டியல் வெளியிட்டுள்ளது”.

“இது முற்றிலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக யாருடைய தூண்டுதல் பெயரால், அவப்பெயர் உருவாக்க நடத்தப்பட்ட விவகாரமாகவே தோன்றுகிறது. சட்டவிதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டிய அமலாக்கத்துறை இந்த சொத்து முடக்க விவகாரத்தில் சட்டவிதிகள் அனைத்தையும் மீறி அவசர அவசரமாக செயல்பட்டுள்ளது.”

“இது யாரோ பின்னணியில் இருப்பதை தெளிவாக்குகிறது. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனகள் எதிலும் எனக்கு எந்தவித பங்கோ, பணப்பரிமாற்றமோ நடைபெறவில்லை என்பதை நன்கு அறிந்தும்”,

Maran Brothers1(C)“சன் குழுமம் மற்றும் சவுத் ஏசியன் எப்.எம். லிமிடெட் நிறுவனகளில் எனக்கு எந்தவித உரிமையும், தொடர்பும் இல்லாதபோது தொழில் ரீதியாக மேலே குறிப்பிட்ட நிறுவனங்களிடையே நடைபெற்றுள்ள பண முதலீட்டை திசை திருப்பியிருப்பது இதன் பின்னணியினை தெளிவாக்கும்”.

“இரு நிறுவனங்களுக்கிடையே வெளிநாட்டில் இருந்து பணம் முதலீடு என்றால் அதற்கு மத்திய அரசிடம் உரிய அனுமதி பெறாமல் செய்ய முடியாது என்பது சாதரண அறிவு படைத்தவர்களுக்கு தெரிந்த விவகாரம்”.

“அப்படி வியாபார ரீதியாக மத்திய அரசின் அனுமதி பெற்று நடைபெற்ற பண முதலீட்டுக்கு வண்ணம் பூசுவது அரசியல் இல்லாமல் வேறாக இருக்க முடியாது”.

“இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை சட்டவிதிகளை புறந்தள்ளி நடவடிக்கை எடுத்துள்ளது என்பதும், சட்டவிதிகளை அறிந்தவர்களால் நன்கு உணரமுடியும்”.

“அமலாக்கத்துறை சட்டவிதி என்ன சொல்கிறது? ஒரு சொத்தை முடக்க வேண்டுமென்றால் அந்த சொத்து குறிப்பிட்ட குற்றச்சாட்டின் விளைவாக பெற்றதாக இருந்ததால்தான், அதனை முடக்க வேண்டும்.”

“சம்பந்தமே இல்லாத சொத்துக்களை முடக்கி நீண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது ஒன்றே யாருடைய நோக்கத்தையோ செயலாக்க அமலாக்கத்துறை திட்டமிட்டு செயல்பட்டுள்ளது என்பதை தெளிவாக காட்டுகிறது என கூறியுள்ளார் தயாநிதி மாறன்.