Home அவசியம் படிக்க வேண்டியவை விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி செய்தால் ‘பொடா’ சட்டம் பாயும் – எதிர்கட்சி எம்பி எச்சரிக்கை

விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி செய்தால் ‘பொடா’ சட்டம் பாயும் – எதிர்கட்சி எம்பி எச்சரிக்கை

767
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 3 – நேற்று முன்தினம் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான பொடா சட்ட தீர்மானத்தை உள்துறை அமைச்சு தாக்கல் செய்தது.

அச்சட்டத்தில் உள்துறை அமைச்சு வரையறுத்துள்ள அதிகாரங்கள் வரம்புக்கு மீறி இருப்பதாக பிகேஆர் வர்த்தகம் மற்றும் முதலீடு விவகாரங்களின் தலைவரும், கிளானா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினருமான வாங் சென் மற்றும் பாஸ் கட்சியின் கோல திரெங்கானு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா பாஹ்ரேன் ஆகியோர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

பொடா சட்டப்பிரிவு 66பி -ன் கீழ் ஓர் இயக்கத்தை உள்துறை அமைச்சரே உறுதி செய்வார் என்றும், அதனை அரசிதழில் வெளியிட அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளனர்.

#TamilSchoolmychoice

Wong chen

மேலும், ஒரு காவல்துறை அதிகாரி தரும் அறிக்கையின் மேல் உள்துறை அமைச்சர் நம்பிக்கை கொண்டிருந்தால், சம்பந்தப்பட்ட அமைப்பை தீவிரவாத அமைப்பு என அறிவித்து அதனை அரசிதழில் வெளியிடும் அதிகாரம் பெற்றிருப்பார் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே, பொடா சட்டம் குறித்து வாங் சென் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில், “பொடா சட்ட தீர்மானம் வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் மீண்டும் விவாதிக்கப்படவுள்ளது. அதற்காக எனது பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நானும் அதற்கான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளேன். இந்த தீர்மானம் அடிப்படையில் மிகவும் அபாயகரமானது. மீண்டும் ஐஎஸ்ஏ சட்டத்தை கொண்டு வரக்கூடியது. அதாவது, யார் வேண்டுமானாலும் காலவரையின்றி, விசாரணையின்றி தடுத்து வைக்கப்படலாம்.”

“பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டால் அதற்கு நீதிமன்ற மறுவிசாரணை கிடையாது. இன்னும் சொல்லப்போனால் உங்களுக்கென்று ஒரு வழக்கறிஞரை நியமிக்க முடியாது. விடுதலை செய்யுமாறு நீதிபதியிடமும் கோரிக்கை வைக்க முடியாது. எந்த ஒரு விசாரணையும் இன்றி தடுத்து வைக்கப்படுவீர்கள். உங்களுக்கு எதிராக பல பொய்யான ஆதாரங்கள் காட்டப்படும் வாய்ப்பு உள்ளது”

“நீங்கள் ஒரு தீவிரவாதியாக இருக்கத் தேவையில்லை. அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஏதாவது நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் பொடா சட்டம் பாயும். உதாரணமாக, தமிழ் விடுதலைப் புலிகளுக்கு (உள்துறை அமைச்சு இதை தீவிரவாத இயக்கமாக அறிவித்துள்ளது) நிதியுதவி செய்தால் பொடாவில் கைது செய்யப்படுவீர்கள். ஐஎஸ்ஐஎஸ் சட்டைகள் அல்லது கொடிகளை இரவுக் கடைகளில் (பாசார் மாலாம்) வாங்கினாலும் கைது செய்யப்படுவீர்கள். ஐஎஸ்ஐஎஸ் சம்பந்தமான பேஸ்புக் பக்கத்தை ‘லைக்’ செய்தாலும் எந்த விசாரணையும் இன்றி தடுத்து வைக்கப்படுவீர்கள்” என்று வாங் சென் கூறியுள்ளார்.