கோலாலம்பூர், ஏப்ரல் 4 – ஆசிய வர்த்தகத்தில் நாம் முன்னிலை பெற வேண்டுமானால், உற்பத்தியையும், புதுமையையும் தொடர்ந்து அதிகரிக்க வேண்டும் என பிரதமர் நஜிப் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
தொழில் துறையில் சிறந்த விளங்கியவர்களுக்கான விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பிரதமர், மலேசிய வர்த்தகம் பற்றி கூறியதாவது:-
“620 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஆசிய கண்டத்தில் நாம் சிறந்த முறையில் முன்னிலை பெற்று வருகிறோம். எனினும் நமது முயற்சியினை அதிகரிக்க வேண்டும். நாட்டின் வர்த்தகம் முன்னிலை பெற வேண்டுமானால், மலேசிய வர்த்தக சமூகம் உற்பத்திக்கும், புதுமைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.”
“எல்லைகளைத் தாண்டி நமது நாட்டின் வெற்றியை உறுதி செய்வதற்கு இவை இரண்டும் முக்கிய காரணிகளாக இருக்கும். அவற்றை செயல்படுத்த அரசு எல்லா வகையிலும் துணை நிற்கும்” என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த 1991-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விருது வழங்கும் விழா, தொழில்துறையில் சிறப்பாக செயல்படுவோருக்கு ஆண்டு தோறும் பல்வேறு விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் பிரதமர் நஜிப்புடன் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் முஸ்தபா முகமதுவும் கலந்து கொண்டார்.