கோலாலம்பூர் – கடந்த 28 மார்ச் 2015 சனிக்கிழமை இரவு மணி 7 முதல் 10 மணி வரை பிரீக்பீல்ட்ஸ் நுண்கலைக் கோயில் அரங்கத்தில் மலேசிய இந்து அகாடமி புரவலராக ஆதரவு தர, லாஸ்யா கலாலயமும், தினகரன் நுண்கலைகலைக்கழகமும் ஐம்பெரும்காப்பியம் நாட்டிய நாடகத்தை அரங்கேற்றினார்கள்.
ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களையும் ஒன்றிணைத்து ஒரு நாட்டிய நாடகமாக உருவாக்கி அரங்கேற்றும் வடிவம் உலகத்திலேயே இதுதான் முதன்முறை என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஐம்பெரும்காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, குண்டலகேசி மற்றும் வளையாபதி ஆகியவற்றின் கதையை எல்லோரும் எளிதில் புரிந்துகொள்ளும் விதமாக காட்சி அமைப்புகள் எளிமையாக அமைக்கப்பட்டிருந்தது மட்டுமல்லாது அந்த எளிமை காரணமாக எவ்விதத்திலும் அக்கதாபாத்திரங்களின் முக்கியத்துவம் குறைந்துவிடாமல் பாடல் வரியமைப்பும், நடன அமைப்பும் செய்திருந்தது பார்த்தவர்கள் அனைவராலும் பாராட்டப்பட்ட ஒன்றாகும்.
ஒரு காப்பியத்தை அல்ல – ஐந்து காப்பியங்களைத் தொகுக்கும் போது- படைக்கப்படும் நேரம் நிச்சயம் நீளமாக இருக்கத்தான் வாய்ப்பிருக்கிறது. எவ்வளவு சிறப்பாக ஒரு நிகழ்ச்சி இருந்தாலும் அது அதிக நேரம் எடுத்துக்கொண்டால் பார்ப்பவர்கள் நிச்சயம் சலிப்படையவே செய்வார்கள்.
பார்ப்பவர்களின் மன நிலையை நன்கு புரிந்துகொண்டு மூன்று மணி நேரத்திற்கு முன்பாகவே காப்பியம் நிறைவுபெற்றது. இதில் மிகவும் சிறப்பான அம்சம் என்னவென்றால் அந்த நேரத்திற்குள் ஒரு வினாடியைக் கூட வீணாக்காமல் காட்சிகளை தடையற்ற அருவி போல் அடுக்கிக்கொண்டு சென்று, இந்த நாட்டிய நாடகத்தை எங்கும் தொய்வில்லாமல், விறுவிறுப்பாக நிகழ்த்திக் காட்டிவிட்டார்கள்.
இதன் முழுப்பெருமையும் இதனை மிகவும் நேர்த்தியான நடன அமைப்பு செய்து, உயிரோட்டத்துடன் கதாபாத்திரங்களை நடமாடவிட்ட மதுர நாட்டியமாமணி ஸ்ரீமதி குருவாயூர் உஷாவையும், நாட்டிய நாடகத்தின் கருத்தும், சுவையும் மாறாமல் அதனை எழுத்தில் கொணர்ந்த ஆசிரியை செல்வி ஷாலினி ஸ்ரீ கெங்கனையும், டாக்டர் மு. பாலதர்மலிங்கத்தையும், சாரும்.
அதே வேளையில் இந்த நிகழ்ச்சியில் அவருடன் இணைந்து பாடியவர்களையும், பக்கவாத்தியங்களில் மெருகேற்றியவர்களையும் வாழ்த்தாமலும், பாராட்டாமலும் இருக்கமுடியாது.
நிகழ்ச்சியில் இடம்பெற்ற தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாடலாசிரியர் ஃபீனிக்ஸ்தாசன் எழுதியுள்ளார். இந்த காப்பியம் நிகழ்ச்சியின் கருத்துருவாக்கம் தனேசு பாலகிருஷ்ணன்.
பாத்திரங்கள் அருமையான தேர்வு
இந்த நாட்டிய நாடகத்தின் ஒவ்வொரு காப்பியத்திலும் மிக முக்கியமான பாத்திரங்கள் – அதாவது கோவலன், கண்ணகி, மாதவி, மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி மற்றும் சீவகன் போன்ற பாத்திரங்களை ஏற்று நடித்து, நடனமாட மிகப் பொருத்தமானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, நன்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளார்கள். இதற்காக ஸ்ரீமதி குருவாயூர் உஷாவுக்கு இன்னொரு பாராட்டு தரலாம்.
உடன் நடனமாடிய நடனமணிகளும், மற்றவர்களும் எல்லா விதத்திலும் ஒருவருக்கொருவர் ஈடுகொடுத்தும், தங்களுக்கு வழங்கப்பட்ட பகுதியை அழகுற செய்தும், நிகழ்ச்சி சிறப்புற முக்கிய பங்காற்றியுள்ளனர் என்றால் அது மிகையாகாது.
அரங்கம் நிறைந்து பார்க்கப்பட்ட இந்நாட்டிய நாடகம், அனைவராலும் பாராட்டப்பட்ட போது ‘காப்பியம்’ நாட்டிய நாடகத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நிச்சயம் உற்சாகத்தைத் தந்திருக்கும்.
இதனை எந்த ஒரு காரணத்தினாலோ பார்க்க இயலாத நாட்டிய இரசிகர்கள் நிச்சயம் அரியதொரு வாய்ப்பை இழந்தவர்களாவர்.
ஒரு சில நேரங்களில் மேடையில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக வெளிச்சம் இருந்திருக்கலாமே என்று தோன்றியதைத் தவிர காப்பியம் நாட்டிய நாடகம் எந்தவிதத்திலும் குறை வைக்காத – ஏற்பாட்டாளர்களுக்கு மிகப்பெரிய வெற்றியையும், பெருமையையும் தேடித் தந்த படைப்பாகும்.
-சா.விக்னேஸ்வரி