கென்யா, ஏப்ரல் 6 – கடந்த 2–ஆம் தேதி கென்யாவின் காரிசாவில் உள்ள பல்கலைக்கழக விடுதியில் புகுந்து சோமாலியாவைச் சேர்ந்த அல்–ஷெபாப் தீவிரவாதிகள் 4 பேர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.
அதில் 148 பேர் பலியாகினர். அவர்களில் 142 பேர் மாணவர்கள். மற்றும் 3 போலீஸ் அதிகாரிகளும், 3 ராணுவ வீரர்களும் அடங்குவர். இந்த தாக்குதலில் தொடர்புடைய 5 பேரை கென்யா போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்கள் அல்கொய்தாவுடன் தொடர்புடைய அல்–ஷெபாப் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் பல்கலைக்கழகத்தில் பணிபுரிபவர்கள். 3 பேர் ஒருங்கிணைப்பாளர்கள்.
அவர்கள் சோமாலியாவுக்கு தப்பி செல்ல முயன்றபோது சிக்கினார்கள். இவர்களது பெயர் வெளியிடப்பட வில்லை. மற்ற 2 பேர் பல்கலைக்கழகத்தில் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் பாதுகாப்பு ஊழியர். மற்றொருவர் பல்கலைக் கழகத்தில் பதுங்கியிருந்து தீவிரவாதிகளுக்கு வெடிபொருட்கள் தந்தவர். அவரது பெயர் ரஷீத் சார்லஸ் பெர்சர்ரோ. இவர் தான்சானியா நாட்டைச் சேர்ந்தவர். இந்த தகவலை கென்யா உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் வென்டா ஜோகா தெரிவித்தார்.
இவர்கள் தவிர தீவிரவாதிகள் நடத்திய இத்தாக்குதலுக்கு மூளையாக செயல் பட்டவரை போலீசார் கண்டு பிடித்துள்ளனர். அவரது பெயர் முகமதுமுகமது. இவர் மதரசா பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர்.
இவர் கென்யாவைச் சேர்ந்தவர். அதே நேரத்தில் இவர் சோமாலியாவின் அல்– ஷெபாப் தீவிரவாதிகளின் விசுவாசியாக செயல்பட்டவர். தொடக்கத்தில் மதவாதியாக இருந்த அவர் பின்னர் தீவிரவாதி ஆனார்.
காரிசாவைச் சேர்ந்த இவர் எல்லை தாண்டி சோமாலியா சென்று அல்–ஷெபாப் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்தார். இவரது தலைக்கு கென்யா அரசு ரூ.1 கோடியே 35 லட்சம் பரிசு தொகை அறிவித்துள்ளது.
இதற்கிடையே சோமாலியாவின் அல்–ஷெபாப் தீவிரவாதிகள் கென்யா அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதில், ‘‘சோமாலியாவில் இருந்து கென்யா படைகள் வாபஸ் பெறாவிட்டால் மீண்டும் இதுபோன்ற ரத்தக் குளியல் நடைபெறும். மிக கடுமையான தாக்குதலை சந்திக்க நேரிடும்’’ என தெரிவித்துள்ளனர்.