Home அவசியம் படிக்க வேண்டியவை திரைவிமர்சனம்: ‘ஓ காதல் கண்மணி’ – நவீன காதல் கவிதை

திரைவிமர்சனம்: ‘ஓ காதல் கண்மணி’ – நவீன காதல் கவிதை

1376
0
SHARE
Ad

maxresdefault

கோலாலம்பூர், ஏப்ரல் 17 – இரயில் சந்திப்பு, மும்பை நகரம், புறாக்கள் கூட்டம், கட்டுப்பாடுகளை உடைத்தெறியத் துணியும் காதல், திடீர் முத்தம், பின்னங்கழுத்தில் வியர்வைத் துளிகள், பிய்த்துப் போட்ட வசனங்கள் என ‘இது மணிரத்னம் படம்’ என்று சொல்லக்கூடிய வகையில் அவரது வழக்கமான பாணி அத்தனையும் உள்ளது.

இதற்கு முன்பு மணிரத்னம் இயக்கத்தில், கடந்த 2000-ம் ஆண்டு வெளிவந்த ‘அலைபாயுதே’ படம் உங்களுக்குப் பிடித்திருந்தால், நிச்சயமாக ‘ஓ காதல் கண்மணி’ இன்னும் கூடுதலான மகிழ்ச்சியை கொடுக்கும்.

#TamilSchoolmychoice

வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணிக் கொண்ட காதல் ஜோடிகள் எதிர்கொள்ளும் ஈகோ பிரச்சனைகளை ‘அலைபாயுதே’ படம் காட்டியது என்றால், ‘ஓ காதல் கண்மணி’ கல்யாணமே வேண்டாம் என்ற மனநிலைக்கு வந்துவிட்ட 2015 -ம் ஆண்டு காதலர்களின் மனநிலையையும், அவர்களுக்குள் ஏற்படும் ஈகோவையும் அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றது. அலைபாயுதே அப்டேட்டட் வெர்ஷன் என்று கூட சொல்லலாம்.

நாகரீகத்தின் உச்சத்தில் இருக்கும் மும்பை நகரத்தில்,ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் காதல் எப்படி பயணிக்கிறது? கல்யாணத்தில் சிக்கிக் கொள்ள விரும்பாத அந்த காதலை முந்தைய தலைமுறை எப்படி பார்க்கிறது? சமூகத்தில் அந்த காதலுக்கு எப்படிப்பட்ட அங்கீகாரம் கிடைக்கிறது? என்பதை மணிரத்னம் தனக்கே உரிய பாணியில் இளமை, துள்ளலுடன் விறுவிறுப்பாகக் கொடுத்திருக்கின்றார்.

அதற்கு பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் பக்காவாக சேர்ந்து கொள்ள, ‘ஓ காதல் கண்மணி’ இன்றைய இளைஞர்களின் ‘லேட்டஸ்ட் ட்ரெண்ட்’ ஆகிவிட்டது.

நடிப்பு

அடடா… துல்கர் சல்மானுக்கும், நித்யா மேனனுக்கும் இடையில் அப்படியொரு கெமிஸ்ட்ரி. ஏற்கனவே மலையாளத்தில் வெளிவந்த ‘உஸ்தாஜ் ஹோட்டல்’, ‘100 டேஸ் லவ்’ படங்களை விட ‘ஒ காதல் கண்மணி’-ல் நெருக்கம் சற்றே கூடியிருக்கின்றது. இருவரையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் ஜோடிப் பொருத்தம் அவ்வளவு அழகு.

ஜாலியாக, விளையாட்டுப் போக்கான கதாப்பாத்திரத்தில் நடிப்பதில் துல்கர் சல்மான் தொடர்ந்து ஈர்த்து வருகின்றார்.

“ஆ…தி” என்று நித்யாவிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதில் தொடங்கி, “என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு பாரீஸ் போ… எங்க வேணா போ” என்று கண் கலங்குவது வரை தனது இயல்பான நடிப்பால் ரசிக்க வைக்கின்றார்.

okkanmani6feb2

மம்முட்டி போல் அவரது மகனான துல்கர் சல்மான் தமிழ் படங்களில் நல்ல ஒரு இடத்தைப் பிடித்துவிடுவார் என்றே தோன்றுகிறது. குறிப்பாக அவரது நடிப்பில் எங்குமே மம்முட்டியின் சாயலைப் பார்க்க முடியவில்லை. அதுவே அவரது பலம் என்று நினைக்கிறேன்.

நித்யா மேனன்… அழகி… துல்கர் சல்மானுடன் அருகில் நிற்கும் காட்சிகளில் அவருக்கு பாதி உயரம் தான் இருக்கிறார். எடுப்பான கவர்ச்சியான தோற்றம் எல்லாம் கிடையாது.

இருந்தாலும், அந்த அழகிய முகத்திலும், காதல் பேசும் கண்களிலும், வெள்ளந்தி சிரிப்பிலும் கவர்ச்சி நிரம்பி வழிகின்றது.

“உன் கூட ஒரே ரூம்ல படுத்தாலும் என்னால நல்ல பொண்ணா நடந்துக்க முடியுமா?”,

“டோய்… என்னைப் பிடிச்சிருக்கா.. இல்லை இப்ப பண்ண இந்த கசமுசா தான் பிடிச்சிருக்கா?”,

“அந்த அகமதாபாத் ட்ரிப்பு… நேத்து குடுத்த உம்மா இதெல்லாம் என்ன தாத்தா கணக்கா?” என பல வசனங்களையும் நித்யா மேனன் வசம் ஒப்படைத்து இளசுகளை சூடேற்றியிருக்கிறார் மணி.

அடுத்ததாக பெரிதும் ரசிக்க வைத்தது, கணவன், மனைவியாக பிரகாஷ்ராஜ், பரதநாட்டிய கலைஞர் லீலா சாம்சனின் நடிப்பு. கணபதி அங்கிள், பவானி ஆண்டி கதாப்பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார்கள்.

“யூ மீன் லிவ்விங் டூகெதர்?” என்று துல்கரைப் பார்த்து கேட்கும் காட்சிகளில் பிரகாஷ்ராஜ் முகத்தில் காட்டும் அதிர்ச்சி அசத்தல்.

“இவங்க சின்ன வயசுல அப்படி பாடுவாங்க..” என்று பிரகாஷ்ராஜ் கூறும் போது, “பார்க்குறதுக்கு எப்படி இருப்பேன் அதை சொல்லுங்க கணபதி” என்று கணவரிடம் எதிர்பார்ப்பதும், “நீங்க மட்டும் என்ன என் கச்சேரி கேட்கவா வந்தீங்க?” என்று கிண்டல் அடிப்பதுமாக பவானி ஆண்டி கதாப்பாத்திரம் அற்புதம்.

இதுதவிர விஜய் டிவி புகழ் அறிவிப்பாளர் ரம்யா, கனிகா என தெரிந்த முகங்களும் வந்து போகின்றனர்.

திரைக்கதை

குழப்பமே இல்லாத திரைக்கதை… குறுக்கும் நெடுக்குமாக எங்குமே செல்லாமல் கதை தொடங்கியது முதல் முடிவு வரை இரயில் தண்டவாளம் போல் ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்றது.

திடீர் திருப்பத்திற்காக கதைக்குள் கதை என்று வேறு கோணத்தில் எந்த ஒரு நகர்த்தலும் இல்லை. சாவகாசமாக அமர்ந்து ரசிக்கலாம். ஆனால் ஒரே முகங்களை படம் முடியும் வரை பார்ப்பதற்கும் ஒரு பொறுமை வேண்டும். அதை படத்தின் காட்சிகளும், வசனங்களும் அலுப்பு தட்டாமல் கொண்டு செல்கின்றன.

கல்யாணத்தின் மீது நம்பிக்கையே இல்லாமல் இருக்கும் காதலர்கள், கணபதி அங்கிள், பவானி ஆண்டி இருவருக்கும் இடையிலான அன்யோன்யத்தைக் கண்டு சிலிர்ப்பது, வீடியோ கேம் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் கதாநாயகன் தனக்கு காதலில் வரும் எதிர்ப்புகளையெல்லாம் ஒரு ஐடியாக எடுத்துக் கொண்டு தான் தயாரிக்கும் வீடியோ கேமில் சேர்த்துக் கொள்வது என படத்தில் கவனிக்கப் பட வேண்டிய விசயங்களும் உள்ளன.

ஒளிப்பதிவு, இசை

விக்கீபீடியா படி, இயக்குநர் மணிரத்னத்திற்கு 58 வயது, பிசி ஸ்ரீராமிற்கு 59, வைரமுத்துவிற்கு 61, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 49…

ஆனால் படத்தில் காட்சிகள், வசனம், ஒளிப்பதிவு, பாடல்கள், பாடல்வரிகள் என அனைத்திலும் இளமை தளும்பி வழிகின்றது.

OK-Kanmani-Dialogue-Promo

வீடு, இரயில், கடைவீதி என மும்பை நகரம் அனைத்தும் பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவில் ரம்யமாகத் தெரிகின்றது.

நித்யா மேனன் தனது தந்தையைப் பற்றி சொல்லும் ஒரு க்ளோசப் காட்சியில் மட்டும் கேமரா அவ்வளவு ஆட்டம். அது வேண்டுமென்றே வைக்கப்பட்டதா? அல்லது எடிட்டிங்கில் விடுபட்ட ஒன்றா? என்று சரியாகத் தெரியவில்லை. ஆனால் படம் பார்க்கும் போது அங்கு மட்டும் கொஞ்சம் சலிப்பு ஏற்பட்டது.

ரஹ்மான் இசையில், வைரமுத்து வரிகளில் “ஆட்டக்காரா”, “மெண்டல் மனதில்”,”இரகசியம்” என அனைத்து பாடல்களும் கேட்டவுடன் மனதில் ஒட்டிக்கொள்கிறது.

மற்றபடி, படம் சூப்பர்…

மொத்தத்தில், ‘ஓ காதல் கண்மணி’ – நவீன காதல் கவிதை!

– ஃபீனிக்ஸ்தாசன்