ஜாகர்த்தா, ஏப்ரல் 17 – வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதன் காரணமாக இந்தோனிசிய விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை காலை இந்தோனிசியாவின் அம்போன் நகரிலிருந்து புறப்பட்ட பாத்திக் ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.
அம்போன் நகரில் உள்ள வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையத்திற்கு குறுந்தகவல் வழி இந்த மிரட்டல் விடுக்கப்பட்டதால் அங்கு பதற்றம் அதிகரித்தது.
இதையடுத்து பாங்காக் நோக்கி பறந்து கொண்டிருந்த அந்த விமானம் உடனடியாக தெற்கு சுலாவேசி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
இதையடுத்து விமானத்தில் இருந்த 122 பயணிகளும் வெளியேற்றப்பட்டு விமானத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை இந்தோனிசிய போக்குவரத்து அமைச்சின் செய்தித் தொடர்பாளர் உறுதி செய்தார். எனினும் இச்சோதனையில் ஏதேனும் வெடிகுண்டு சிக்கியதா என்பதை அவர் உறுதி செய்யவில்லை.
இந்தோனிசியாவின் முன்னணி மலிவு விலை விமான சேவை வழங்கும் லயன் குழும நிறுவனங்களில் பாத்திக் ஏர் நிறுவனமும் ஒன்று.