சீனா, ஏப்ரல் 18 – சீனாவின் ரகசிய ஆவணங்களை வெளிநாட்டு இணையதளத்தில் வெளியிட்டதற்காக அந்நாட்டின் பிரபல பெண் பத்திரிகையாளருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
காவ் யு என்ற 71 வயது பத்திரிகையாளருக்கு ரகசிய ஆவணங்களை வெளியிட்ட குற்றத்திற்காக ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அவர் வெளியிட்ட ரகசிய ஆவணங்கள் பற்றிய தகவல்களை சீனா அரசு தெரிவிக்கவில்லை.
அது கம்யூனிஸ்ட் கட்சியின், ‘ஆவண எண் 9′ என்று சொல்லப்படுகிறது. மேலும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் உரையையும் அவர் வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். காவ் யூ, பல பத்திரிகைகளில் பணிபுரிந்துள்ள, ஒரு பிரபல பத்திரிகையாளர்.
இந்தக் குற்றத்தை அவர் ஒப்புக்கொள்வதற்காக அவரது மகனை வைத்து சீன போலீசார் மிரட்டியிருக்கிறார்கள். அதன் பிறகே அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
பத்திரிகையாளர் ஒருவருக்கு சிறை தண்டனை வழங்கியிருப்பது சீனாவில் பரவலாக கண்டனங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இது, ஜனநாயகத்திற்கு எதிரானதாக இருப்பதாகவும், பத்திரிகை சுதந்திரத்தை குலைப்பதாகவும், விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பத்திரிகையாளர்களை சிறை வைப்பதும், ஒடுக்குவதும் சீனாவில் புதிதல்ல. உலகிலேயே, அதிக பத்திரிகையாளர்களை சிறையில் அடைத்துள்ள நாடு சீனா என்பது குறிப்பிடத்தக்கது.