பெய்ஜிங், ஏப்ரல் 19 – சீனாவின் வரலாற்று சிறப்பு மிக்க நகரமான சியானை, இந்தியாவின் தொழில்நுட்ப நகரமான பெங்களூரு போல் மாற்றித் தரவேண்டும் என சீன அதிபர் ஜிங்பிங் மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள சியான் நகரை தொழில்நுட்ப நகரமாக மாற்ற சீனா பெரும் முயற்சிகளை எடுத்து வருகின்றது. இந்தியாவின் தொழில்நுட்பத் தலைநகரான பெங்களூரை முன்மாதிரியாக வைத்தே, சியான் நகரம் மாற்றப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், அடுத்த மாதம் சீனாவிற்கு இந்தியப் பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், சியானை பெங்களூரு போன்று மாற்ற உதவுமாறு சீன அதிபர் ஜி ஜிங்பிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக சியான் நகர தொழில்துறை மேம்பாட்டு மண்டலத்தின் முக்கிய அதிகாரி வாங் மெங்ஹோ கூறுகையில், “இந்தியத் தொழில்நுட்ப நகரமான பெங்களூரு உலக அளவில் சிறந்த விளங்குகிறது. நாங்கள் அதை முன்மாதிரியாக வைத்தே சியானை உருவாக்கி வருகின்றோம். இதற்காக நாங்கள் அங்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டு வருகின்றோம்.”
“தொழில்நுட்ப மேம்பாட்டுத் துறையில் இந்தியாவும் சீனாவும் இணைந்து செயல்பட வேண்டும். அது சாத்தியமானால் இரு நாடுகளுக்கும் அது மிகச் சிறந்த பலன்களைக் கொடுக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.