கோலாலம்பூர், ஏப்ரல் 19 – வாட்ஸ் அப், அண்டிரொய்டு பயனர்களுக்கு புதிய வசதி ஒன்றை ஏற்படுத்தி உள்ளது. அதுதான் ‘கூகுள் டிரைவ்’ (Google Drive)-ல் வாட்ஸ் அப் உரையாடல்களுக்கான ‘பேக்அப்’ (Backup) வசதி.
இது தொடர்பாக அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாவது:-
“தரவுகளையும், தகவல்களையும் சேமிக்கப் பயன்படும் கூகுள் டிரைவில், இனி வாட்ஸ் அப் உரையாடல்களையும் சேமிக்கலாம். அதற்கு நீங்கள் வாட்ஸ் அப்பின் புதிய பதிவான v2.12.45-வை, உங்கள் திறன்பேசியில் மேம்படுத்தி இருக்க வேண்டும். புதிய பதிவில் கூகுள் டிரைவ் பேக்அப்பிற்கான தேர்வை நாங்கள் மேம்படுத்தி உள்ளோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
800 மில்லியன் பயனர்கள்:
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை, வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 600 மில்லியனாக இருந்து வந்தது. இந்நிலையில், அந்த எண்ணிக்கை 800 மில்லியனாக உயர்ந்துள்ளது என அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜேன் கௌம் தெரிவித்துள்ளார்.