டோக்கியோ, ஏப்ரல் 21 – ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள மிட்சுகோஷி எனும் பல்பொருள் அங்காடி ஒன்றில் அந்நாட்டின் பாரம்பரிய உடை அணிந்த பெண் ஒருத்தி இனிய முகத்துடன் வாடிக்கையாளர்களை வரவேற்கிறாள்.
காலை முதல் மாலை வரை அவளின் இந்த பணியில் துளி அளவு சோர்வு கூடத் தெரியவில்லை. காரணம் அந்த பெண், மனித உருவம் கொண்ட ‘ரோபோ’ (Robo).
வாடிக்கையாளர்கள் அங்காடிக்கு உள்ளே வரும்பொழுது “எனது பெயர் ஐகோ சிஹிரா. நலமாக உள்ளீர்களா?” என்று அன்பான வார்த்தைகள் கூறி வரவேற்கும் இந்த ரோபோவை டோஷிபா நிறுவனம் உருவாக்கி உள்ளது. ஜப்பான் மொழி மட்டுமல்லாது சீன மொழியும் பேசும் இந்த ரோபோ, சில சமயங்களில் மனிதர்களைப் போன்று கண்களை சிமிட்டியும் வாடிக்கையாளர்களைக் கவர்கிறது.
இந்த ரோபோ குறித்து டோஷிபா நிறுவனத்தின் தலைமை நிபுணர் ஹிடோஷி டொகுடா கூறுகையில், “மனிதர்களைப் போன்ற ரோபோக்களை உருவாக்குவதே எங்கள் நிறுவனத்தின் இலக்கு. மிட்சுகோஷி அங்காடியில் வைக்கப்பட்டுள்ள அந்த ரோபோ எங்கள் திறமைக்கான அடையாளம். அதேபோன்ற தரமான ரோபோக்களை உருவாக்க பெரும் முயற்சிகளை எடுத்து வருகின்றோம்” என்று அவர் கூறியுள்ளார்.
வாடிக்கையாளர்கள் சேவையில் ரோபோக்களை இயக்குவது ஜப்பானிற்கு இது முதல் முறை அல்ல. மிட்சுபிஷி யுஎப்ஜே போன்ற வங்கிகளில் மனித உணர்வுகளைப் புரிந்து கொள்ளக் கூடிய ரோபோக்கள் வாடிக்கையாளர்களுக்கான சேவையில் ஈடுபட்டு வருகின்றன. அவை 19 மொழிகளை புரிந்து கொண்டு அவற்றிற்கு பதில் அளிக்கும் வகையில் நிரலாக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.