Home உலகம் வெளிநாடுகளில் பல ஆயிரம் கோடி பதுக்கல் – ராஜபக்சே கைதாவாரா?

வெளிநாடுகளில் பல ஆயிரம் கோடி பதுக்கல் – ராஜபக்சே கைதாவாரா?

444
0
SHARE
Ad

rajapukshaகொழும்பு, ஏப்ரல் 21 – ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடுகளில் பல ஆயிரம் கோடி பதுக்கி உள்ளதாக கூறப்படுகிறது. துபாயில் மட்டும் ரூ. 6,500 கோடி  பதுக்கியிருப்பதாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் ராஜபக்சே கைதாவாரா? என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் கடந்த 2009-ஆம் ஆண்டு நடந்த இறுதிகட்ட  போரின் போது, விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பல கோடி ரூபாய் பணம் மற்றும் நகை உள்ளிட்ட ஆபரணங்களை அரசு கருவூலத்தில் சேர்க்காமல்  ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் எடுத்து சென்று விட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இது குறித்து விசாரணை நடத்த புதிய அதிபர் மைத்ரிபால  சிறிசேன உத்தரவிட்டார். இதில் ரூ.6500 கோடியை ராஜபக்சே குடும்பத்தினர் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பது தொரிய வந்துள்ளது.

#TamilSchoolmychoice

ஷெசல்ஸ் மற்றும்  சோவியத் யூனியன் கூட்டமைப்பில் இருந்து பிரிந்த நாடுகளில் ராஜபக்சேவும், அவரது குடும்பத்தினரும் இந்த பணத்தை முதலீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தவும், பதுக்கப்பட்டுள்ள பணத்தை இலங்கைக்கு மீட்டு கொண்டு வரவும் அரசு உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பாக  வரும் 23 மற்றும் 24-ஆம் தேதிகளில் ராஜபக்சே இலங்கையின் ஊழல் தடுப்பு பிரிவு ஆணை குழு முன்பாக ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று சம்மன்  அனுப்பப்பட்டுள்ளது.

ராஜபக்சே கைதாவாரா? என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ராஜபக்சேவின் சகோதாரரும், முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சருமான  கோத்தபய ராஜபக்சேவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அவர் வருகிற 26 மற்றும் 27-ஆம் தேதிகளில் ஊழல் தடுப்பு பிரிவு ஆணை குழு முன்பாக ஆஜராகி  வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

கோத்தபயாவின் சொத்து தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் ஏற்கனவே புலனாய்வு பிரிவிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ராஜபக்சே அதிபராக இருந்தபோது திஸ்ஸ அத்தநாயகவுக்கு அமைச்சர் பதவி கொடுத்ததில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் இது குறித்தும் ராஜபக்சேவிடம்  விசாரணை நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ராஜபக்சே குடும்பத்தினர் துபாயில் ரகசியமாக வங்கி கணக்கில் ரூ.6500 கோடி  பணத்தை பதுக்கி வைத்துள்ளனர் என்று அமைச்சரவை செய்தி தொடர்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் இதுபோல் வெளிநாடுகளில் ராஜபக்சே குடும்பத்தினர்  வங்கிகளில் ரகசியமாக கோடி கணக்கில் பணத்தை பதுக்கியுள்ளனரா என்பது குறித்த விவரங்களையும் அனைத்துலக ஒழுங்குமுறை ஆணையத்திடம் தகவல்கள்  கோரப்பட்டுள்ளது.

அவர்கள் மேற்கொண்டு விவரங்கள் அளித்தால் அதன் பேரிலும் ராஜபக்சே மற்றும் அவரது தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே இலங்கையில் சீனா உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்டுள்ள பல்வேறு திட்ட பணிகளில் ஊழல் செய்ததாக ராஜபக்சே, அவரது குடும்பத்தினர் மீது புகார்  கூறப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கேவை எதிர்த்து  ராஜபக்சே போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ரூ.6500 கோடி பதுக்கல் குறித்து  விசாரணைக்கு அரசு உத்தரவிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.